மதுரை : ”அன்பு இருந்தால் ஆண்டவனை அடையலாம். இறைவன் நாமம் தீவினைகளை அகற்றும்,” என, மதுரை சத்குரு சங்கீத சமாஜம், அதிருத்ர மகாயக்ஞ கமிட்டி சார்பில் லட்சுமி சுந்தரம் ஹாலில் நடக்கும் மார்கழி பக்தி திருவிழாவில் ’அன்பே சிவம்’ என்ற தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவாளரும், தினமலர் ஆன்மிக மலரில் எழுதுபவருமான என்.ஸ்ரீனிவாசன்பேசினார்.
அவர் பேசியதாவது: ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செயல் செய்யும் போதும் இறைவன் நாமத்தை உச்சரிக்க வேண்டும். பிரார்த்தனை செய்யும் போதும், கோயிலுக்கு செல்லும் போதும் கிடைக்கும் சில செய்திகளால் கவனம் திசை திரும்பும். கவனம் சிதறாமல் பிரார்த் தனையில் ஈடுபட வேண்டும். இறைவனிடம் உறவுகளுக்கு தரும் அன்பை விட அதிகம் தர வேண்டும்.
அன்பு இருந்தால் கல்லில் கூட இறைவன் தென்படுவார். கோயில்களில் தேங்காய் உடைப்பது ஆணவத்தை போக்குவது போல புறசடங்குகள் இறைவனை அடைய வழிவகுக்கும். ஆனால் அன்பு மட்டுமே அவருடன் இணைக்கும்.
மனதை அடக்கி வாழ உடல், மனம், வாக்கு ஆகியவற்றை ஒரு நிலையில் வைக்க வேண்டும். இதற்கு முயற்சி, பயிற்சி வேண்டும். நீண்டகால சொந்தங்களை காணும் போது ஏற்படும் உணர்வுடன் இறைவனை தரிசிக்க வேண்டும். இறைவனுக்கு படைப்பது துாய பொருட்களாக இருக்க வேண்டும். துாய அன்பு இருதயத்திலிருந்து எழுவதால் அதை துாய்மையாக வைக்க சத்தியம், தர்மத்தை கடைபிடிக்க வேண்டும். பாண்டிய மன்னர்கள் தான் பக்தியில் சிறந்தவர் கள். ஏழைகளுக்கு உணவளித்தால் இறைவன் துணை இருப்பார் என்றார்.