பதிவு செய்த நாள்
24
டிச
2019
11:12
சபரிமலை: சபரிமலை மூலவருக்கு அணிவிக்க, ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து, தங்க அங்கி பவனி நேற்று காலை புறப்பட்டது.
சபரிமலை மூலவருக்கு அணிவிக்க, திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜா, 1973-ல் தங்க அங்கியை காணிக்கையாக வழங்கினார். இது, மண்டல பூஜைக்கு முந்தைய நாளிலும், மண்டல பூஜை நாளிலும் மூலவருக்கு அணிவிக்கப்பட்டிருக்கும்.பத்தணந்திட்டை மாவட்டம், ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் வைக்கப்பட்டுள்ள இந்த அங்கி, ஒவ்வோர் ஆண்டும், மண்டல பூஜைக்கு நான்கு நாட்கள் முன்னதாக புறப்படும். வழிநெடுகிலும் பக்தர்கள் வழிபடுவர். நேற்று காலை, 7:30- மணிக்கு ரதத்தில், பலத்த பாதுகாப்புடன் தங்க அங்கி புறப் பட்டது. 26-ம் தேதி மாலை, சன்னிதானம் வந்தடையும். அன்று மாலை, 6:30 மணிக்கு, அய்யப் பனுக்கு தங்க அங்கி சார்த்தி, தீபாராதனை நடைபெறும். 27-ம் தேதி மண்டல பூஜை நேரத்திலும், அய்யப்பனுக்கு இந்த அங்கி அணிவிக்கப்பட்டிருக்கும்.