பதிவு செய்த நாள்
25
டிச
2019
02:12
வரலாற்று ஆவணமாகவும், இரு கருவறை ஒரே தெய்வம் என பல சிறப்புகளை கொண்ட பழங்கால கோவிலை மீட்க கைகொடுங்கள் என, மக்கள் வேண்டுகோள் விடுத்துள் ளனர்.உடுமலை பகுதியில், அமராவதி மற்றும் உப்பாறு ஆற்றுப்படுகைகளில், பழங்கால கோவில்கள் அதிகளவு உள்ளன.
இதில், உப்பாறு படுகை எனப்படும் குடிமங்கலம் பகுதியில், சோமவாரப்பட்டி கண்டியம்மன் கோவில் மிக பழமை வாய்ந்ததாகும்.சமீபத்தில், கோவில் பகுதியில், நடத்தப்பட்ட மேற்பரப்பு ஆய்வில், சங்ககாலம் மற்றும் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த, தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட மண்பாண்ட சில்லு, சதுரங்க விளையாட்டிற்கு பயன்படும் கல் பொம்மை, பச்சைக்கற்களால் ஆன அணிகலன்கள், துளையிடப்பட்ட மண்பாண்டம் ஆகியவை கண்டறியப்பட்டு, அப்பகுதியின் தொன்மையை உறுதி செய்தன.
சிறப்பு பெற்றது கோவிலில் இரு கருவறையிலும் ஒரே தெய்வம் என்ற சிறப்புடன் கண்டியம் மன் கோவில் அமைந்துள்ளது. பல்வேறு காலகட்டங்களில், முன்மண்டபம், ராஜகோபுரம், கொடிக்கம்பம் ஆகியவை மன்னர்கள், பாளையக்காரர்கள் காலத்தில் கட்டப்பட்டுள்ளது. கோவிலுக்கான தேரும், தேரோடும் வீதியும் இருந்துள்ளது. குடிமங்கலம் பகுதியின் வரலா ற்று ஆவணமாக கருதப்படும் இக்கோவில் பொலிவிழந்து வரலாறும் மறைந்து வருகிறது.
மறையும் வரலாறுகோவிலின் மேல்தளத்தில், கருவறை கோபுரத்துக்கும், ராஜகோபுரத்து க்கும் இடையிலான பகுதியில், விளைநிலம் போல செடிகள் முளைத்து, பார்ப்பவர்களை வேதனையடைய செய்கிறது.
தற்காலிக தீர்வாக பரம்பரை முறைதாரர்கள், மருந்து தெளித்து செடிகளை கட்டுப்படுத்தி வருகின்றனர். புதர் மண்டி மைதானம் போல மாறும் நிலைக்கு கோவில் தள்ளப்பட்டும், இந்து அறநிலையத்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.தொல்லியல்துறை வழிகாட்டு தலுடன், கோவில் புனரமைக்கப்படும் என அத்துறையினரும், அரசியல்வாதிகள் போல வாக்குறுதி மட்டுமே அளித்து வருகின்றனர்.
பல ஆயிரம் ஆண்டுகளை கடந்து நிற்கும் வரலாற்றை காப்பற்றாமல், அதன் அழிவை வேடிக்கை பார்ப்பது வேதனை தருவதாக, வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இத்தகைய தொன்மை வாய்ந்த கோவிலை பராமரிக்கவும், பாதுகாக்கவும், அறநிலையத் துறையோடு, தன்னார்வலர்களும், உழவார பணியில் களமிறங்கினால், சிறப்புகள் திரும்ப பெற்று, கோவில் சீர்பெறும். வழித்தடமாக மாறியுள்ள தேரோடும் வீதியில், அழகு பொங்க மீண்டும் தேரோடும் என அப்பகுதி மக்கள் ஆதங்கத்துடன் தெரிவிக்கின்றனர்.