பதிவு செய்த நாள்
29
டிச
2019
05:12
சிதம்பரம்: நடராஜர் கோவிலில், மார்கழி மாத ஆருத்ரா மகா தரிசன உற்சவம், வரும், 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 10ம் தேதி, ஆருத்ரா மகா தரிசனம் நடக்கிறது.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், சிவகாமசுந்தரி அம்பாள் சமேத ஆனந்த நடராஜருக்கு, மார்கழி மாத ஆருத்ரா மகா தரிசனம், உற்சவ கொடியேற்றம், ஜன., 1ம் தேதி நடக்கிறது.இதையொட்டி, நாளை, கொடி மரத்திற்கு விக்னேஸ்வர பூஜை, பல்வேறு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. ஜன., 1ம் தேதி காலை, சிவகாமசுந்தரி அம்பாள் சமேத ஆனந்த நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடக்கிறது. பஞ்சமூர்த்திகள் புறப்பாடு செய்து, பிரகாரம் வலம் வந்து சன்னிதி கொடிமரம் முன் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளிப்பர்.காலை, 7:00 மணிக்கு, உற்சவக்கொடி ஏற்றப்பட்டு, மகா தீபாராதனை நடக்கிறது. ஆருத்ரா தரிசனத்தையொட்டி, தினமும், சிவகாமசுந்தரி அம்பாள் சமேத நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடக்கின்றன.
காலை, பஞ்சமூர்த்திகள் புறப்பாடும்; இரவு, சிறப்பு வாகனத்தில், நடராஜர் புறப்பாடு உற்சவமும், 10 நாட்கள் நடக்கின்றன.உற்சவத்தில், 5ம் நாளான, 5ம் தேதி, தெருவடைச்சான் தேரோட்டம், 8ம் தேதி இரவு, தங்க ரதத்தில் பிச்சாண்டவர் தரிசனம், 9ம் தேதி, நடராஜர் ஆருத்ரா தேரோட்டம் நடக்கிறது. வரும், 10ம் தேதி காலை, ஆயிரங்கால் மண்டபத்தில், திருவாபரண ராஜ அலங்காரத்தில் நடராஜர், பக்தர்களுக்கு காட்சி தருகிறார். மதியம், 12:00 மணிக்கு, சித்சபையில் ரகசிய பூஜை, பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெற்று, மதியம், 2:00 மணிக்கு, ஆருத்ரா மகா தரிசனம், சித்சபை பிரவேசம் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை, கோவில் பொது தீட்சிதர்கள் மற்றும் கட்டளைதாரர்கள் செய்து வருகின்றனர்.