பதிவு செய்த நாள்
30
டிச
2019
11:12
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே, 1,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட, பல்லவர் கால சிற்பத் தொகுப்பு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மைய தலைவர் சு. பாலாஜி தலைமையில், கோகுல சூர்யா, குணசேகரன் ஆகியோர், வேடபாளையம் கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டனர். சப்த மாதர்கள்அப்போது, பல்லவர் காலத்தைச் சேர்ந்த, அரிய படைப்பான சிற்ப தொகுப்பை கண்டறிந்தனர். இது குறித்து, உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மைய தலைவர் சு.பாலாஜி கூறியதாவது: வேடபாளையத்தில், களஆய்வு செய்தபோது, 8ம் நுாற்றாண்டு, பல்லவர் காலத்தை சேர்ந்த, சப்த மாதர்கள் எனப்படும், ஏழு அன்னையர் சிலைகள், ஒரே கல்லில் செதுக்கப்பட்ட புடைப்பு சிற்பங்களாக கண்டறிந்தோம்.இது, 1.75 அடி உயரத்திலும், 6 அடி அகலத்திலும் உள்ளது. ஏழு அன்னையரை வழிபடுவது பெண் தெய்வ வழிபாட்டில், முதல் வழிபாடாகவும், முக்கியத்துவம் வாய்ந்த வழிபாடாகவும் இருப்பதாகும்.
பெண் தெய்வ வழிபாடு என்பது வளமையின் அடையாளமாக வேளாண்மை செழிக்க, செல்வ வளம் பெருக, குழந்தைகள் நோயின்றி வாழ, அரசர்கள் பிற நாட்டை வெற்றி பெற இன்னும் பிற நன்மைகளை வேண்டி மக்களும், மன்னர்களும் வழிபடுவதாகும். இந்த சிற்பத் தொகுப்பு உடைபட்டும், சற்று சிதைவுற்றும் உள்ளது. இதில் பிராமி, மகேஸ்வரி, வைஷ்ணவி, கவுமாரி, வராஹி, இந்திராணி, சாமுண்டி ஆகியோர் வீற்றிருக்கின்றனர்.பத்ர குண்டலம்இதன் அருகிலேயே, விஷ்ணு துர்க்கை சிலை உடைந்த நிலையில் உள்ளது. இதுவும், எட்டாம் நுாற்றாண்டு, பல்லவர் காலத்தை சார்ந்தது.இதன் தலைப் பகுதியில், பல்லவர் காலத்திற்கே உரிய கரண்ட மகுடமும், காதில் பத்ர குண்டலமும், கழுத்தில் அணிகலனும், நான்கு கரங்களில் காப்பும், ஒரு கையில் சங்கு, மற்றொரு கையில் சக்கரம், அடுத்த கரத்தால் அருள்பாலித்தும், நான்காவது கரத்தை இடுப்பில் வைத்தப்படியும் காட்சியளிக்கிறாள். இங்கு அகழாய்வு செய்தால், மேலும், பல சிலைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. இத்தகவலை உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மைய கவுரவ தலைவரும், தமிழக தொல்லியல் துறையின் ஓய்வுப் பெற்ற பேராசிரியருமான மார்க்சியா காந்தியும் உறுதி செய்துள்ளார்.இவ்வாறு, அவர் கூறினார்.