குமாரபாளையம்: குமாரபாளையத்தில், பொங்கல் விழா கோலாகலமாக நடந்தது. குமார பாளையத்தில், மார்கழி மாதம் அனைத்து வார்டுகளிலும் சந்து பொங்கல் விழா நடத்துவது வழக்கம். நேற்று 29ம் தேதி, இந்த விழா நகரில், 50க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்தது. காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குடங்கள் எடுத்துக் கொண்டு ஊர்வலமாக பக்தர்கள் தங்கள் பகுதிகளுக்கு கொண்டு சென்று சிறப்பு வழிபாடு நடத்தினர். அந்தந்த பகுதி பகுதி மக்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதுகுறித்து, மக்கள் கூறியதாவது: தொழில் வளம் சிறக்கவும், குழந்தைகள் கல்வி வளர்ச்சி பெறவும், ஆண், பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடவும் விழா நடக்கிறது. பாரம் பரிய நடைமுறைகள் என்றும் மாறாது என்பதற்கு இது போன்ற நிகழ்வுகளே சான்று. ஒற்றுமை உணர்வுகள் ஏற்பட இது போன்ற விழாக்கள் பெரிதும் உதவி செய்யும் என்பதற்காகத்தான் இந்த விழாக்களை முன்னோர் ஏற்படுத்தியுள்ளனர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.