மதுரை: அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் மண்டல விழா காலமான நவ.,16 முதல் டிச.,27 வரை சபரிமலையில் மூன்று வேளையும் மூன்று லட்சத்து 83 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
செய்தி தொடர்பாளர் மணி கூறியதாவது: சபரிமலை பயணத்தின் போது உடல் நலக்குறைவு ஏற்பட்ட 852 பேருக்கு ஸ்ட்ரெச்சர் சர்வீஸ் உதவி வழங்கப்பட்டது. அப்பாச்சி மேட்டில் 320 முறையும், சன்னிதானத்தில் 220 முறையும் ஸ்ட்ரெச்சர் பயன்படுத்தப்பட்டு உடல் நலக் குறைவு ஏற்பட்ட பக்தர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 15 ஆக்ஸிஜன் பார்லர்கள் மூலம் மூச்சுத்திணறல் ஏற்பட்ட 1,439 பேருக்கு ஆக்ஸிஜனும், 36 ஆயிரத்து 550 பேருக்கு முதலுதவி சிகிச்சையும் வழங்கப்பட்டது.
சன்னிதான மருத்துவமனையில் 5,844 பேருக்கு இலவச மருத்துவ உதவி, மருந்து, மாத்திரை கள் வழங்கப்பட்டன.
நிலக்கல் முகாம் மூலம் 370 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு 120 வாகனங்களுக்கு இலவச மாக பழுது நீக்கப்பட்டது. அங்கு 30 ஸ்ட்ரெச்சர் சர்வீஸ் மேற்கொள்ளப்பட்டது. தங்க அங்கி ஊர்வலத்தின் போது ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சரம்குத்தியில் அகில பாரத ஐயப்ப சேவா சங்க தொண்டர்கள் பம்பையில் இருந்து தலையில் சுமந்த வந்த தங்க அங்கிக்கு மாநில தலைவர் விஸ்வநாதன் மாலை அணிவித்து வணங்கினார்.
தொண்டர்படை எமர்ஜென்சி கேப்டன் தாமோதரன் தலைமையில் 478 கல்லுாரி மாணவர்கள், 680 ஐயப்ப சேவா சங்க தொண்டர்கள் சேவையில் ஈடுபட்டனர். மகர விளக்கு காலங்களில் சேவைகள் தொடரும், என்றார்.