பதிவு செய்த நாள்
02
ஜன
2020
12:01
சேலம்: ஆங்கில புத்தாண்டையொட்டி, சேலம் மாவட்டத்திலுள்ள பல்வேறு கோவில்களில், நேற்று சிறப்பு பூஜை நடந்தது. அதில், வித வித அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமிகளை, திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். சேலம், கோட்டை மாரியம்மன் கோவிலில், நேற்று காலை சிறப்பு பூஜை நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அஸ்தம்பட்டி மாரியம்மன், முந்திரி, பாதாம், அத்திப்பழங்களால் அலங்கரிக்கப்பட்டார். சேலம் ராஜகணபதி, எல்லைப்பிடாரி அம்மன் முத்தங்கி அலங்காரத்திலும், நெத்திமேடு தண்ணீர் பந்தல் காளியம்மன் தங்க கவசம், அரிசிபாளையம், கல்யாண சுப்ரமணியர், வள்ளி, தெய்வானையுடன் ராஜ அலங்காரத்திலும் அருள்பாலித்தனர். அதேபோல், கந்தாஸ்ரமம், ஊத்துமலை முருகன், கோட்டை பெருமாள் உள்பட, சேலத்திலுள்ள அனைத்து கோவில்களிலும் நடந்த சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்து வழிபட்டனர்.
மேலும், ஆத்தூர், வெள்ளை விநாயகர் கோவிலில், வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் விநாயகர் அருள்பாலித்தார். வடசென்னிமலை பாலசுப்ரமணியர் கோவிலில், அன்னதானம் வழங்கப்பட்டது. இடைப்பாடி கவுண்டம்பட்டியில் உள்ள சின்னமாரியம்மன் சந்தனகாப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
தங்க கவசத்தில் ஜொலித்த கந்தசாமி: சேலம் அருகேவுள்ள, காளிப்பட்டி கந்தசாமி கோவிலில், ஒவ்வொரு மாத சஷ்டி திதி, கிருத்திகை நட்சத்திரத்தில் சிறப்பு பூஜை நடக்கும். ஆங்கில புத்தாண்டான நேற்று, முருகனுக்கு உகந்த சஷ்டி திதியும் சேர்ந்து வந்ததால், கந்தசாமிக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் செய்யப்பட்டது. கோவில் முழுவதும், மலர் மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டது. உற்சவர் வள்ளி, தெய்வானை சமேத கந்தசாமிக்கு, தங்கக்கவசம், முத்து கிரீடம் அணிவித்து, ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
திரளான பக்தர்கள், காலை முதலே குடும்பத்துடன் கோவிலுக்கு வந்து, நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். அதேபோல், அங்குள்ள சென்றாய பெருமாள் கோவிலில், வீரபக்த ஆஞ்சநேயர் வெள்ளி கவசத்தில் காட்சியளித்தார். இளம்பிள்ளை, சந்தைப்பேட்டை, பார்வதி பரஞ்ஜோதிஸ்வரர் கோவிலில், மூலவர் அடிமுடி, அருட்பெரும் ஜோதி ரூபமான, லிங்கோத்பவர் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.