வடாரண்யேஸ்வரர் கோவிலில் 9ல் ஆருத்ர அபிஷேகம்
பதிவு செய்த நாள்
06
ஜன 2020 12:01
திருவாலங்காடு:திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில், வரும், 9ம் தேதி இரவு நடக்கும் ஆருத்ரா அபிஷேகம் மற்றும் மறுநாள் அதிகாலை நடைபெறும் கோபுர தரிசனத்திற்கு லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவதால், பக்தர்கள் வசதிக்காக கோவில் நிர்வாகத்தால் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வர சுவாமி கோவில், திருவாலங்காட்டில் உள்ளது. இக்கோவில், சிவபெருமான் நடனமாடிய, ஐந்து சபைகளில் முதற்சபையான ரத்தினசபை ஆகும்.இந்த கோவிலில், வரும், 9ம் தேதி, இரவு, 9:00 மணிக்கு, நடராஜ பெருமானுக்கு உகந்த விருட்சமான, ஆலமரத்தின் கீழ், 34 வகையான பழங்களால் ஆருத்ரா அபிஷேகம் விடிய, விடிய நடக்கிறது.தொடர்ந்து, 10ம் தேதி, அதிகாலை, 5:00 மணிக்கு, நடராஜ பெருமான் சிறப்பு அலங்காரத்துடன், கோவில் வளாகத்தில் வீதியுலா வந்து, கோவில் கோபுரம் முன் வந்து, அருள்பாலிப்பார்.அப்போது, கோபுர தரிசனம் நடைபெறும். இவ்விழாவில், தமிழகம் ஆந்திரா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், இரவு முழுவதும் வந்திருந்து மூலவரை வழிபட்டும், நடராஜ பெருமானுக்கு நடக்கும் அபிஷேகம் பார்த்தும் வழிபடுவர்.பக்தர்கள், ஆருத்ரா அபிஷேகத்தை பார்க்கும் வகையில், 3.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், தற்காலிக தகடுகளால் நிழற்குடை பந்தலும், 85 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கோவில் வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்காரமும் செய்யப்பட உள்ளது. இது தவிர, பக்தர்கள் அனைவரும் ஆருத்ரா அபிஷேகம் பார்க்கும் வகையில், கோவில் வளாகத்தில் ஆறு இடங்களில், ௧ லட்சம் ரூபாய் மதிப்பில், எல்.இ.டி., தொலைக்காட்சி பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.இதனால், கூட்ட நெரிசலில் பக்தர்கள் சிக்கி தவிப்பதை தவிர்க்க, இந்து அறநிலை துறை ஆணையர் உத்தரவின் பேரில், புதியதாக ஒரு வழி ஏற்படுத்தப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.மேலும் பக்தர்கள் வசதிக்காக, திருத்தணி மற்றும் திருவள்ளூர் அரசு போக்குவரத்து பணிமனை சார்பில், சிறப்பு பஸ்கள் இயக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
|