பதிவு செய்த நாள்
06
ஜன
2020
11:01
சபரிமலை: மகரவிளக்கு சீசன் துவங்கியுள்ள நிலையில், சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால், 12 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருந்து, தரிசனம் செய்கின்றனர்.
மகரவிளக்கு கால பூஜைகளுக்காக, டிச., 30 மாலை நடை திறந்தது முதல், பக்தர்கள் கூட்டம் தொடர்ச்சியாக அலைமோதுகிறது. புத்தாண்டு தினத்தில், ஒரே நாளில், 1 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.கட்டுப்பாடுதொடர்ந்து, கூட்டம் அதிகமாக உள்ளதால், நிலக்கல்லிலும், பம்பையிலும் கட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தரிசனம் முடிந்து, மலை இறங்கும் பக்தர்கள் கூட்டத்தை கணக்கில் கொண்டு, பம்பையில் இருந்து, கட்டம் கட்டமாக பக்தர்கள் அனுப்பப்படுகின்றனர்.
பம்பையில் குறைந்த பட்சம், ஒரு மணி நேரம் காத்திருந்த பின் தான் மலையேற முடிகிறது. அதன்பின், சரங்குத்தியில் இருந்து, நீண்ட வரிசை காணப்படுகிறது. சில நேரங்களில் இந்த வரிசை, மரக்கூட்டம் வரை காணப்படுகிறது. 12 முதல், 15 மணி நேரம் வரை காத்து நின்று, பக்தர்கள், 18ம் படியேறுகின்றனர்.கூட்டம் அதிகமாக உள்ளதால், தரிசனம் முடிந்த பக்தர்கள் உடனடியாக பம்பை திரும்பும் படி ஒலிபெருக்கியில் தொடர்ந்து அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது.
தொடர்ச்சியாக, அலைமோதும் பக்தர்களால் சபரிமலை திணறுகிறது. கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் போது போலீசாருக்கும், பக்தர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.
நடை அடைப்பு இல்லை: சபரிமலையில் மிக முக்கியமான பூஜைகளில் ஒன்று, மகரசங்கரம பூஜை. சூரியன், தனுசு ராசியில் இருந்து, மகர ராசியில் கடக்கும் முகூர்த்தத்தில் இந்த பூஜை நடக்கும். இந்த நாளில் தான் மகரஜோதியும், மகர நட்சத்திரமும் காட்சி தரும்.இந்த ஆண்டு, சூரியன், மகர ராசிக்கு அதிகாலை, 2:09 மணிக்கு கடக்கிறது. இதனால், ஜன., 14 மாலை, 5:00 மணிக்கு திறக்கப்படும் நடை, இரவு, 11:00 மணிக்கு அடைக்கப்படாமல், தொடர்ந்து திறந்திருக்கும். பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். வரும், 15 அதிகாலை, 1:45 மணிக்கு மகர சங்கரம பூஜைக்கான ஆயத்தங்கள் துவங்கும். 2:09 மணிக்கு இந்த பூஜை நடந்த பின், 2:30 மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும். வரும், 15 அதிகாலை, 3:00 மணிக்கு பதிலாக, 4:00 மணிக்கு நடை திறக்கும்.
தமிழர்களுக்கு பாராட்டு: சபரிமலையில் மலையாய் குவியும் குப்பையை அகற்றி, சுகாதாரத்தை பராமரிப்பதற்காக பத்தணந்திட்டை மாவட்ட கலெக்டர் தலைமையில், சபரிமலை சுகாதார சங்கம் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு தான் சபரிமலை, பம்பை, நிலக்கல் பகுதிகளில் துப்புரவு பணிகளை மேற்கொள்கிறது. துப்புரவு படை வீரர்கள் என்று அழைக்கப்படும் இவர்கள், காலை, மதியம், மாலை, இரவு என எல்லா நேரமும் குவியும் குப்பையை உடனுக்குடன் அப்புறப்படுத்தி, சுத்தமாக பராமரிக்கின்றனர்.
இதில் முழுக்க முழுக்க தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்களே ஈடுபட்டுள்ளனர். இலவசமாக தங்கும் இடம், உணவுடன், தினசரி சம்பளம், 450 ரூபாய் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு பெட்ஷீட் வழங்கும் விழாவில், தேவசம் போர்டு தலைவர் வாசு பேசுகையில், சபரிமலை துப்புரவு பணியில் ஈடுபட்டுள்ள இந்த தொழிலாளர்களின் பணி மகத்தானது, பாராட்ட வார்த்தைகள் இல்லை. அய்யப்பன் அவர்களுக்கு அருள் புரிவார், என்றார்.