பதிவு செய்த நாள்
07
ஜன
2020
11:01
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு நடந்தது. பெருமாள் சொர்க்க வாசல் வழியாக வந்தார். பரமக்குடி, ராமேஸ்வரத்திலும் வைகுண்ட ஏகாதசி கோலாகலமாக நடந்தது.-திருப்புல்லாணி ஆதி ஜெகநாதப் பெருமாள் சமேத பத்மாஸனித்தாயார் கோயில் வைணவ திருத்தலங்களில் 44 வது இடத்தில் உள்ளது. இங்கு அத்யயன உத்ஸவத்தை முன்னிட்டு டிச.27 முதல் பகல் பத்து பூஜை முறைகள் நடந்தது.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று காலை 10:00 மணிக்கு சயனத்திருக்கோலமும், மதியம் 1:00 மணிக்கு விஸ்வரூப தரிசன காட்சிகளும், மாலை 6:30 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பிற்கான ஆயத்த பூஜைகளும் நடந்தது.மாலை 7:15 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண ஜெகநாதப்பெருமாள் உற்ஸவர்களாக அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் சீர்பாத துாக்கிகளால் பட்டாபிஷேக ராமர் சன்னதி வழியாக உள் பிரகார வீதி உலா வந்து, ஆழ்வார்கள் எதிர் சேவை நிகழ்ச்சி நடந்தது.இரவு 7:35 மணிக்கு பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு ஏகாதசி மண்டபம் வழியாக பருத்தி உலா எனப்படும் இங்கும் அங்கும் பல்லாக்கை அசைத்தவாறு பெருமாள் மூன்று முறை மீண்டும், மீண்டும் வலம் வந்தார்.
பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்கினார்கள். கோயில் ஸ்தானிக பட்டாச்சாரியார்களால் நாலாயிர திவ்ய பிரபந்தப் பாடல்கள் பாடப்பட்டு, சாற்று முறை, கோஷ்டி பூஜை முறைகள் நடந்தது. பெருமாள் எதர்ஸ்தானம் மூலம் மூலவரின் இருப்பிடம் கொண்டு செல்லப்பட்டார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர். இன்று ஜன.7 முதல் 15 புதன் கிழமை வரை ராப்பத்து உற்ஸவம் நடக்கிறது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் சேது மாதவர் சன்னதியில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. பகல் 1:00 மணிக்கு தங்க கருட வாகனத்தில் ஸ்ரீராமர், சீதை, லெட்சுமணர் எழுந்தருளி வீதி உலா சென்றனர். பின் ராமர் தீர்த்தகுளத்தில் எழுந்தருளியதும் அங்கு கூடியிருந்த பக்தருக்கு தீர்த்த வாரி நிகழ்ச்சி நடந்தது.பின் கோயிலுக்கு ஸ்ரீராமர், சீதை, லெட்சுணர் திரும்பியதும் சேது மாதவர் சன்னதியில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, ஸ்ரீ ராமருக்கு கோயில் குருக்கள் மகா தீபாராதனை நடத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பரமக்குடி: பரமக்குடியில் உள்ள அனைத்து பெருமாள் கோயில்களிலும் சொர்க்க வாசல்திறப்பு விழா கோலாகலமாக நடந்தது. மார்கழி மகா உற்ஸவத்தையொட்டி, சுந்தரராஜப் பெருமாள் கோயிலில்தினமும் காலை 5:00 மணிக்கு திருப்பாவை பாடப்பட்டு தீபாராதனை நடக்கிறது.முக்கிய நிகழ்வாக பகல் பத்து நிகழ்ச்சி டிச.27 ல் துவங்கி, தினமும் 12ஆழ்வார்களின் பாசுரங்கள் வாசிக்கப்பட்டன.பகல் பத்து உற்ஸவத்தின் கடைசி நாளான நேற்று முன் தினம் மாலை 5:00 மணிக்குதிருமங்கையாழ்வாரின் வேண்டுகோளுக்கு இணங்க, பெருமாள் மோகினி அவதாரத்தில் அலங்காரமாகி, திருநெடுந்தாண்டகம் வாசிக்கப்பட்டுவீதிவலம் வந்தார். மாலை 6:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.தொடர்ந்து நேற்று காலை 4:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவைபாடப்பட்டது. தீபாராதனைக்குப் பின் காலை 5:05 மணிக்கு பெருமாள் பட்டு உடுத்தி சங்கு, சக்கரம் ஏந்தி சர்வ அலங்காரத்துடன் சொர்க்க வாசல் வழியாக வந்தார். ஆடியபடி வீதியை வலம் வந்த பெருமாள், ஆண்டாள் சந்நதியில் மாலை மாற்றல் நிகழ்ச்சி நடந்தது.6:15 மணிக்கு ஏகாதசி மண்டபத்தில் அமர்ந்தார். பின் 11:00 மணி முதல்ேஹாமங்கள், அபிஷேகம் நடந்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு 7:00 மணிக்கு இராப்பத்து நிழச்சி துவங்கியது. இராப்பத்து 8 ம் நாளில்திருமங்கையாழ்வார் மோட்சம், 10 ம் நாள் நம்மாழ்வார் மோட்சத்துடன் விழா நிறைவடையும். இன்று துவாதசி விழாவையொட்டி பெருமாள் கருட வாகனத்தில்வீதியுலா வருவார்.
பரமக்குடி அனுமார் கோதண்டராமசாமி கோயிலில் சிறப்பு தீபாராதனைகளுக்குப்பின், காலை 6:05 மணிக்கு ராமர் பரமபத வாசல் வழியாக வந்தார். எமனேஸ்வரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் காலை 5:00 மணிக்கு மேல் பரமபத வாசலை கடந்து வந்தார். தொடர்ந்து ஏகாதசி மண்டபத்தில் எழுந்தருளிய பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன.