பதிவு செய்த நாள்
07
ஜன
2020
12:01
வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு பெருமாள் கோவில்களில் நேற்று திறக்கப்பட்டது. மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசியை வைகுண்ட ஏகாதசி உற்ஸவமாக வைணவர்கள் கொண்டாடுவர். அன்று திருமாலின் இருப்பிடமான வைகுண்டத்தின் கதவுகள் திறக்கப்படும் என்பது ஹிந்துக்களின் நம்பிக்கை.
வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு பெருமாள் கோவில்களில் நேற்று திறக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
மதுரை கூடலழகர் பெருமாள் கோயில், அழகர்கோவில் சுந்தரராஜபெருமாள், திருப்பரங்குன்றம், திருநகர் கோயில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மூலஸ்தானத்தில் பவளக்கனிவாய் பெருமாள் எழுந்தருளியுள்ளதால் நேற்று மாலை 6:00 மணிக்கு கம்பத்தடி மண்டபத்திலிருந்து மடப்பள்ளி மண்டபம் செல்லும் வழியிலுள்ள பெரிய கதவு திறக்கப்பட்டு பவளக்கனிவாய் பெருமாள் எழுந்தருளினார்.
திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள மூலவர்கள் ஸ்ரீதேவி, பூமா தேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாளுக்கு அதிகாலை சிறப்பு புஷ்ப அலங்காரமாகி விஸ்வரூப தரிசனம் நடந்தது. காலை 5:30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. சயன கோலத்தில் உற்ஸவர் அருள்பாலித்தார். இரவு கருட வாகனத்தில் சுவாமி எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடந்தது. திருநகர் மகாலட்சுமி காலனி பிரசன்ன வரதராஜப் பெருமாள் கோயிலில் காலையில் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரமானது. இரவு பரமபத வாசல் திறக்கப்பட்டு சுவாமி புறப்பாடு நடந்தது.
சோழவந்தான் ஜெனகை நாராயணப்பெருமாள் கோயிலில் நேற்று அதிகாலை 5:00 மணிக்கு ரகுராம் பட்டர் வரதராஜ் பண்டிட் தலைமையில் அம்மன், சுவாமிக்கு சிறப்பு அபிஷேக தீபாராதனை நடந்தது. பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் காலை 5:46 மணிக்கு சொர்க்கவாசலில் எழுந்தருள பக்தர்கள் தரிசித்தனர். ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி சத்ய நாராயணன், கணக்கர் பூபதி, ஊழியர் வசந்த் செய்திருந்தனர். பேரையூர் பிரசன்ன வெங்கடா ஜலபதி கோயிலில் நேற்று அதிகாலை 4:50 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. கோவிந்தா முழக்கத்துடன் பக்தர்கள் வழிபட்டனர்.