உள்ளூர், வெளியூர், வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் என பலவித பக்தர்கள் காஞ்சி மகாசுவாமிகளைத் தேடி வருவர். அனைவருக்கும் ஆசியளிப்பதோடு, அவர்கள் சந்தேகங்களுக்கு பொறுமையாக விளக்கம் அளிப்பார். பணம், பதவி போன்ற வேறுபாடுகளை அவர் என்றுமே பார்த்தது இல்லை. அவரைப் பொறுத்தவரை அனைவரும் அவரது பக்தர்கள்.
செய்த பாவத்தை கடவுளிடம் சொல்வது போல் சொல்லி அழுபவர்கள், பரிகாரம் கேட்பவர்கள், பிரச்னை தீர ஆலோசனை கேட்பவர்கள் என பக்தர்களில் பல ரகம் உண்டு.
ஒருநாள் ஏழை பக்தர் ஒருவர் காஞ்சி மடத்திற்கு வந்தார். மகாசுவாமிகளை விழுந்து வணங்கினார். அவருக்கு கண்ணீர் பெருகியது. என்ன விஷயம் என சுவாமிகள் விசாரித்தார்.
""நான் இதுவரை வாழ்வில் ஏதும் சாதிக்கவில்லை. பணம், புகழ் சம்பாதிக்கவில்லை. மறு உலகிற்காக புண்ணியமும் தேடவில்லை. திருத்தல யாத்திரை சென்றதில்லை. புனித தீர்த்தங்களில் நீராடியதும் இல்லை. நான் எப்படி கடைத்தேறுவது? என் ஜன்மா கடைத்தேற வழி சொல்லுங்கள் சுவாமி!” என்றார்.
அருள் பொங்கப் பார்த்த சுவாமிகள், ""ஆறு ஓடும் நல்ல கிராமமாகப் பார்த்து அங்கேயே தங்கு. அங்கு பல வீடுகள் ஆள் குடியில்லாமல் வெறுமனே பூட்டபட்டிருக்கும். சொந்த பந்தம் எல்லாம் வெளியூரில் இருப்பர். அப்படிப்பட்ட வீட்டில் இருந்தபடி, அதை பராமரிப்பதாக சொன்னால் வாடகை இல்லாமல் தங்க இடம் தருவர். ஆற்றில் தினமும் குளித்து விட்டு ஆயிரம் முறை "காயத்ரி ஜபமோ, ராம நாம ஜபமோ பண்ணு.
சம்மதித்த பக்தர், ஜபித்த பின்னும் நேரம் எனக்கு மிஞ்சுமே, அதையும் பயன்படுத்துவது எப்படி எனக் கேட்டார். அதற்கும் வழி சொன்னார் சுவாமிகள்.
""எல்லா கிராமத்திலும் தபால் ஆபீஸ் கட்டாயம் இருக்கும். காலைச் சாப்பிட்டதும், அங்கு போய் உட்கார். அங்கு வரும் படிக்காதவர்களுக்கு கடிதம், மணியார்டர் பாரம் பூர்த்தி பண்ண... என்று இப்படி அங்கே நிறையப் பேர் வருவார்கள். அவர்களுக்கெல்லாம் உன்னால் ஆனதைச் செய். கடிதம் எழுதி உதவினால் அவர்களால் முடிந்ததை கொடுத்து உதவுவார்கள். அதை வாங்கிக் கொள். செலவுக்கு அந்தப் பணம் உதவும். பொய் பேசாதே. தினமும் சிறிது நேரம் மவுனமாக இரு. இதனால் உனக்கு சந்தோஷம் கிடைக்கும்” என்றார்.
தன்னால் முடிந்ததை சரியாகத் தான் செய்யச் சொல்கிறார் என்று பக்தரின் மனதில் திருப்தி ஏற்பட்டது. "அப்படியே செய்கிறேன் சுவாமி! என வணங்கி விட்டு மகிழ்ச்சியாக விடைபெற்றார் அந்த பக்தர். -