பதிவு செய்த நாள்
08
ஜன
2020
01:01
கோவை: சிறுவாணி சாலை, சென்னனுாரில் அமைந்துள்ள ராதாகிருஷ்ணர் கோவிலில், நாளை காலை, 5:00 மணிக்கு, திருப்பாவையின் 24ம் பாடலை பக்தர்கள் பாராயணம் செய்கின்றனர். கோவிலின் சிறப்புராதாகிருஷ்ணர் கோவில் நுாற்றாண்டு பழமையானது.
முன்பு நாமசங்கீர்த்தன மண்டபமாக இருந்தது. பின்னர் கோவிலாக கட்டப்பட்டது. ஆண்டு முழுக்க ஒவ்வொரு சனிக்கிழமையும், முக்கிய நாட்களில், நாமசங்கீர்த்தன நிகழ்ச்சி நடக்கிறது. இங்கு இசை கற்பவர்களும், இசையை முதன் முதலாக துவக்குபவர்களும் ஏராளம்.மார்கழி மாதத்தையொட்டி, இக்கோவிலில் நாளை அதிகாலையில், அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி... என்று துவங்கும் திருப்பாவை பாடலை பக்தர்கள் பாராயணம் செய்கின்றனர்.பாடலின் பொருள்எம்பெருமானே, வாமன அவதாரத்தில் மகாபலிக்கு, மோட்சம் தர ஈரடியில் மூவுலகும் அளந்த உன் திருப்பாதங்கள் பல்லாண்டு வாழ்வதாக. ராம அவதாரத்தில் சினத்தினால் தென்னிலங்கை சென்று ராவணனை பூண்டோடு அழித்த உன் வலிமை பல்லாண்டு வாழ்வதாக. கிருஷ்ண அவதாரத்தில் வண்டி உருவமாக வந்த சகடாசுரனை உதைத்து அழித்த, உன் புகழ் பல்லாண்டு வாழ்வதாக.கன்றின் வடிவமாய் உன்னை அழிக்க வந்தவனை, விளாமர வடிவமாய் நின்றிருந்த அசுரன் மேல் வீசி எறிந்து, இருவரையும் அழித்த உன் கைகள், பல்லாண்டு வாழ்வதாக.இந்திரனது கோபத்தால் பெய்த மழையில், பசுக்கூட்டங்களை காக்க கோவர்த்தன மலையை குடையாய் எடுத்த உன் வலிமை பல்லாண்டு வாழ்வதாக.இப்படி உன் வீரத்தை எல்லாம் புகழ்ந்து பாடும் எளிய பெண்களுக்கு, நீ பறை என்ற அருளை தருவாய் என்கின்றனர் பெண்கள் என்பதே பாடலின் பொருள்.