பதிவு செய்த நாள்
09
ஜன
2020
12:01
வெள்ளலுாரில் அமைந்துள்ள, ஸ்ரீ பூமி நீளா நாயகி சமேத கரிவரதராஜ பெருமாள் கோவிலில், நாளை அதிகாலையில் திருப்பாவையின், 25ம் பாடலை பக்தர்கள் பாராயணம் செய்கின்றனர்.
கோவிலின் சிறப்பு: வெள்ளலுார் கரிவரதராஜ பெருமாள் கோவில், ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. மன்னர் ஆட்சிக்காலத்தில் உருவானது இந்த கோவில். இங்கு வீற்றிருக்கும் சுயம்பு மூர்த்தியான கரிவரதராஜ பெருமாளையும், ஆஞ்சநேயரையும் வழிபட்டால், குழந்தை பாக்கியம் கிடைக்கும்; கூடாரை வல்லி உற்சவத்தின் போது, ஆண்டாளுக்கு மாலை சாத்தி வழிபட்டால், திருமணம் நிச்சயம் நடக்கும் என்பது நம்பிக்கை. மார்கழி மாதத்தையொட்டி, இக்கோவிலில் நாளை அதிகாலையில், ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்... என்று துவங்கும் திருப்பாவை பாடலை, பக்தர்கள் பாராயணம் செய்கின்றனர்.
பாடலின் பொருள்: அஷ்டமி இரவில் தேவகியின் மகனாய் பிறந்த நீ, அதே இரவில் யசோதையின் பிள்ளையாக எடுத்துச்சென்று வளர்க்கப்பட்டாய். இதை அறியாமல் உன்னைக் கொல்ல நினைத்த கம்சனுக்கு, தானே நெருப்பாய் நின்று அழித்து ஒழித்த, கண்ண பெருமான் அல்லவா நீ. உன்னை பிரிந்து ஏங்கும் ஏக்கத்தையும், அதிகாலை குளிரையும் பொருட்படுத்தாது, உனது செல்வத்தையும், வீரத்தையும், தீரத்தையும், எளிமையையும் பாட வந்துள்ளோம். உன்னையே யாசித்து வந்துள்ள எங்களுக்கு உன்னையும், நோன்புக்கு வேண்டிய பறையையும் தருவாயாக என்று வேண்டுகின்றனர் பெண்கள் என்பதே இப்பாடலின் பொருள்.