பதிவு செய்த நாள்
26
ஏப்
2012
11:04
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு உட்பட்ட சொக்கநாதர் கோயிலில் ரூ. 10 லட்சம், பழனி ஆண்டவர் கோயிலில் ரூ. 13 லட்சத்தில் கும்பாபிஷேக பணிகள் நடக்கின்றன. மூலவர் சன்னதிகளில் திருப்பணிகள் துவக்க, சொக்கநாதர் கோயிலில் நேற்று பாலாலய பூஜைகள் நடந்தன. கோயிலில் எழுந்தருளிய சொக்கநாதர், மீனாட்சி அம்மன், கணபதி, நெல்லி மரத்து விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை, சண்டிகேஸ்வரர், முருகன், வள்ளி, தெய்வானை கரங்களில் பட்டு நூலின் ஒருபகுதி கட்டப்பட்டு, புனிதநீர் நிரப்பப்பட்டிருந்த குடங்களில் மறு பகுதி கட்டப்பட்டது. சிவாச்சார்யார்கள் பூஜை செய்து, சுவாமிகளின் சக்தி புனிதநீர் கும்பங்களில் கலை இறக்கம் செய்யப்பட்டது. கும்பங்கள் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்டன. மூலவர்களின் உருவங்கள் வரையப்பட்டிருந்த படங்களில், கும்பங்களில் இருந்த சக்தி பட்டு நூல்மூலம் கலை ஏற்றம் செய்யப்பட்டது. இன்றுமுதல் மூலவர்கள் சன்னதிகளில் திருப்பணிகள் துவங்குகின்றன. பழனி ஆண்டவர் கோயிலில் விரைவில் பாலாய பூஜைகள் நடக்கவுள்ளன. இரு கோயில்களிலும் கும்பாபிஷேகம் பணிகளில் பங்கேற்க விரும்பும் உபயதாரர்கள், 0452-2482248 டெலிபோனில் தொடர்பு கொள்ளலாம், என துணை கமிஷனர் செந்தில் வேலவன் தெரிவித்தார்.