பதிவு செய்த நாள்
26
ஏப்
2012
11:04
சமணர்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் உணவு சாப்பிட்டு, ஓராண்டு முழுக்க கடைபிடிக்கும், "வர்ஷித்தப் நோன்பின் நிறைவு விழா, பக்திப் பரவசத்துடன் நேற்று முன்தினம் நடந்தது. சென்னை புழல் காந்தி தெருவில், ஸ்ரீஆதிநாத் ஜெயின் சுவேதம்பர் கோவில் உள்ளது. ஆதிநாத் ஜெயின் சுவேதம்பர் மன்னராக இருந்து சாமியரானார். அப்போது, அவரை வணங்கிய மக்கள் மரியாதை செலுத்தும் வகையில் பொன், பொருள் படைத்தனர். உணவு கிடைக்கவில்லை ஆனால், அவருக்கு 406 நாள் வரை உணவு கிடைக்கவில்லை. அப்போது, அவரது சீடர் ஸ்ரீரேயான்ச்குமார், அவரை சந்திக்க நேர்ந்தது. சாமியாராக இருக்கும் தனது குரு உணவு கிடைக்காமல் இருப்பதை ஞானத்தால் அறிந்தார். இதையடுத்து, தனது கைகளால், குருவுக்கு 108 முறை கரும்புச்சாறு கொடுத்து உண்ணாவிரத நிலையை நிறைவு செய்தார். அந்த நிகழ்வை நினைவு கூறும் விதமாக, சமண சமூகத்தவர், ஒரு நாள் விட்டு ஒரு நாள் உணவு உட்கொள்ளும் முழுமையான நோன்பை, 13 மாதங்களுக்கு மேற்கொண்டு "அட்சய திரிதிகா நாளில் நிறைவு செய்கின்றனர். ஓராண்டு முழுக்க இந்த நோன்பு கடைபிடிக்கப்படுதால், "வர்ஷித்தப் எனப்படும் நோன்பு திருநாளாக கொண்டாடப்படுகிறது. மன்னர் வேடம் நோன்பு இருந்தோர் மோட்ச மாலை அணிந்து தயாராக இருக்க, சாமியார்கள் மந்திரம் முழங்க பூஜை செய்தனர். இதையடுத்து, ஸ்ரீரேயான்ச்குமார் என்ற மன்னர் வேடமணிந்தவர், நோன்பு இருந்தவர்களுக்கு கரும்புச்சாறு கொடுத்து நோன்பை நிறைவு செய்தார். நேற்று நடந்த விழாவில், 135 பேர் நோன்பு நிறைவு செய்தனர். நோன்பு இருந்தவர்களின் உறவினர்கள், நண்பர்கள் என, சென்னை வேப்பேரி, சவுகார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, ஆறு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டனர். இக்கோவிலில் சுவேதம்பருக்கு, காலை 6 மணி முதல் பக்தர்கள் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.