பதிவு செய்த நாள்
09
ஜன
2020
11:01
கோத்தகிரி பேரகணி பணிமனையில் நடந்த ஹெத்தையம்மன் திருவிழாவை தொடர்ந்து உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
நீலகிரியில், 6ம் தேதியில் ஹெத்தையம்மன் திருவிழா துவங்கி நடந்து வருகிறது. கிராம கோவில்களில் இருந்து, மடிமனைக்கு அம்மனை ஊர்வலமாக அழைத்து வந்த பக்தர்கள், அங்கேயே தங்கி விரதம் இருக்கின்றனர். நாள்தோறும், கத்திகை எனப்படும் அருள்வாக்கு நிகழ்ச்சியில் பங்கேற்று வருகின்றனர்.
விழாவின் ஒரு நிகழ்ச்சியாக, கடந்த திங்கட்கிழமை கேர்பெட்டா கிராமத்தில் திருவிழா நடந்தது. விழாவில், பேரகணி ஹெத்தையம்மன் அழைப்பு, அருள்வாக்கு, காணிக்கை செலுத்தும் மற்றும் அன்னதானம் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன.இதன் தொடர்ச்சியாக, பேரணி பணிமனையில் நேற்று திருவிழா நடந்தது. இந்த விழாவை தொடர்ந்து, உள்ளூர் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இதனால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, கலாசார உடையுடன், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று காணிக்கை செலுத்தி, அம்மனை வழிபட்டனர். அருள்வாக்கு மற்றும் அன்னதானம் இடம்பெற்றது.விழாவின் ஒரு நிகழ்வாக, நாளை (வெள்ளி) இருப்புகல் மடிமனையிலும், சனிக்கிழமை ஒன்னதலை மடிமனையிலும் திருவிழா நடக்கிறது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர். அருள்வாக்கு மற்றும் அன்னதானம் நடக்கிறது.