பதிவு செய்த நாள்
09
ஜன
2020
11:01
பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில், குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்த, ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
கோபி, பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில், குண்டம் தேர்த்திருவிழா, கடந்த மாதம், 26ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. அன்று முதல் தீ மிதிக்கும் பக்தர்கள் விரதம் கடைபிடிக்க துவங்கினர். அம்மன் சன்னதி எதிரேயுள்ள, 60 அடி நீள குண்டத்தில், தீ மிதிக்கும் நிகழ்ச்சி இன்று காலை, 6:30 மணிக்கு நடக்கிறது. விழாவில், 30 ஆயிரம் பேர் தீ மிதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக விழாவையொட்டி, மாவிளக்கு காப்பு காட்டுதல் பூஜை நேற்று காலை நடந்தது. தொடர்ந்து பூத வாகனத்தில் அம்மன் காட்சியளித்தார். ஆகம விதிப்படி, நேற்று நள்ளிரவு குண்டம் பற்ற வைக்கப்பட்டது. பதி, வெள்ளாளபாளையம், தொட்டிபாளையம், நஞ்சை கோபி கிராமங்களை சேர்ந்த வீரமக்கள், 80 பேர், குண்டத்தை தயார் செய்வர். தலைமை பூசாரி முதலில் இறங்கி, விழாவை தொடங்கி வைப்பார். நாளை மாலை, 4:00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. பாதுகாப்பில் 600 போலீசார், ஈரோடு எஸ்.பி., சக்தி கணேசன் கண்காணிப்பில், இரு ஏ.டி.எஸ்.பி.,க்கள் மேற்பார்வையில், ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த, 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். கூட்ட நெரிசலில் குற்ற சம்பவங்களை கண்காணிக்க, 40 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. விழாவில் தீ மிதிக்கும் பக்தர்கள், கடந்த இரு நாட்களாக, கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், கோவிலுக்கு வந்து இடம் பிடித்து, வரிசையில் காத்திருந்தனர். நள்ளிரவுக்குப் பின், ஏராளமான பக்தர்கள், கோவிலுக்கு வரத் தொடங்கினர்.