பதிவு செய்த நாள்
11
ஜன
2020
10:01
ஈரோடு, ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் நடந்த, ஆருத்ரா தரிசன விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்தில், ஆருத்ரா தரிசன விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நடராஜருக்கு மகா அபிஷேகமும், அதை தொடர்ந்து திருவீதி உலா செல்வதும் நடக்கிறது. ஈரோடு கோட்டை கபாலீஸ்வரர் கோவிலில், ஆருத்ரா தரிசன விழா, நேற்று கோலகலமாக கொண்டாடப் பட்டது. இதையொட்டி அதிகாலையில், நடராஜருக்கு பல்வேறு அபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து தீபாராதனை, பட்டு வஸ்திரம் சாத்துதல் நடந்தது. பூமாலை, நகைகளுடன், சிறப்பு அலங்காரம் செய்து, திருவீயுலா நடநத்து. இதில் வெள்ளி சப்பரத்தில், மாணிக்கவாசகர், சிவகாமியம்மன் சமேதராக எழுந்தருளிய நடராஜர், மணிக்கூண்டு, அக்ரஹார வீதி, கோர்ட் வீதி, மண்டபம் வீதி, மரப்பாலம் வீதி வழியாக சென்று அருள் பாலித்தனர். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
*கோபி, அக்ரஹாரம் வீதி ஈஸ்வரன் கோவில், சாரதா மாரியம்மன் மற்றும் மாதேஸ்வரன் கோவில் ஈஸ்வரன் உள்ளிட்ட சுவாமிகள், கோபி தெப்பக்குளம் வீதிக்கு, நேற்று காலை, 9:00 மணிக்கு எடுத்து வரப்பட்டது. பல்லக்கில் சுமந்தபடி, பக்தர்கள் ஆனந்த நடனமாடி வந்தனர். பின், தெப்பக்குளம் வீதியில், வேம்பு மற்றும் அரசு மரத்துடன் இணைந்த விநாயகர் கோவிலை, 11 முறை சுற்றி வந்தன. விசேஷ பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள் தாலிக்கயிறு, மஞ்சள், குங்குமம் மற்றும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.
* சென்னிமலை, கைலாசநாதர் கோவிலில், நேற்று முன்தினம் இரவு நடராஜ பெருமான், சிவகாமி அம்பாள் திருக்கல்யாண உற்சவம் நடந்தது, அதை தொடர்ந்து நேற்று அதிகாலை சிறப்பு அபிஷேகம், வழிபாடு, சிறப்பு பூஜை நடந்தது. காலை, 7:00 மணிக்கு, சிறப்பு பூஜையை தொடர்ந்து, வெள்ளி விமான வாகனத்தில், நடராஜ பெருமான் மற்றும் சிவகாமி அம்பாள், முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் தனித்தேரில் உலா வந்தனர்.
*புன்செய்புளியம்பட்டி அண்ணாமலையார் கோவிலில், ஆருத்ரா தரிசனத்தையொட்டி, நேற்று அதிகாலை நடராஜருக்கு சிறப்பு அபிஷேக பூஜை நடந்தது. காலை, 9:00 மணியளவில் சுவாமி திருவீதியுலா நடந்தது. திருக்கைலாய வாத்தியம் முழங்க, முக்கிய வீதிகளில் சென்று மீண்டும் கோவிலை சுவாமி அடைந்தார். மாலையில் அண்ணாமலையார் கோவில் திடலில், தமிழ் இசை ஞானி நல்லசிவத்தின் இசை பேருரை நிகழ்ச்சி நடந்தது.
*கோபி பச்சமலையில், சிவகாமி அம்பாள் சமேத நடராஜ சுவாமி கோவிலில், ஆருத்ரா தரிசனத்தையொட்டி, நடராஜருக்கு நேற்று காலை மகா அபிஷேகம் நடந்தது. அதன்பின் சிறப்பு அலங்காரத்தில், சிவகாமி அம்பாளுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.