பதிவு செய்த நாள்
11
ஜன
2020
12:01
திருப்பூர்: அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் மற்றும் திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் நடந்த ஆருத்ரா தரிசன விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள், ஸ்ரீநடராஜபெருமானை தரிசனம் செய்தனர்.மார்கழி மாத பவுர்ணமி நாளில், ஆருத்ரா தரிசன விழா கொண்டாடப்படுகிறது.
கடந்த, 1ம் தேதி ஸ்ரீமாணிக்கவாசகரின் திருவெம்பாவை உற்சவம் துவங்கி, 8ம் தேதி வரை நடந்தது. ஆருத்ரா தரிசன விழா, நேற்று முன்தினம் துவங்கியது.இரவு, 7:00 மணிக்கு, ஆருத்ரா வேள்வி பூஜைகளுடன், விசாலாட்சியம்மன் சமேத விஸ்வேஸ்வர சுவாமி திருக்கல்யாண உற்சவ விழா நடைபெற்றது. தொடர்ந்து, நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு, 32 வகையான திரவியங்களால், சிவகாமியம்மன் சமேத ஸ்ரீநடராஜருக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, மலர் மாலைகள், ருத்ராட்சம், தங்க கவசம் அணிந்து சிறப்பு அலங்காரத்தில், ஸ்ரீநடராஜபெருமான் மற்றும் சிவகாமி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, அரசு மரத்து விநாயகரை பட்டி சுற்றினர். அதன்பின், திருவீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
அதிகாலை 2:30 மணி முதல், பக்தர்கள் கோவில் வளாகத்தில் தங்கியிருந்து, அபிஷேகம் மற்றும் ஆருத்ரா தரிசன வழிபாடுகளில் பங்கேற்றனர். உற்சவமூர்த்திகள், திருவீதியுலா நிறைவுற்று, கோவில் மண்டலத்தில் எழுந்தருளினர். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, ஆருத்ரா தரிசன விழாவில் வழிபட்டனர்.தரிசன விழாவை முன்னிட்டு, பக்தர்களுக்கு, மஞ்சள் சரடு, குங்குமம், வளையல், பிரசாதமாக வழங்கப்பட்டன. அவிநாசியில், ஸ்ரீ அவிநாசிலிங்கேஸ்வரர் தேர்த்திருவிழா அன்னதான கமிட்டி சார்பிலும், திருப்பூரில், பிரதோஷ வழிபாட்டு குழு மற்றும் பக்தர்கள் சார்பிலும், அன்னதானம் வழங்கப்பட்டது. திருப்பூர் - நல்லுார் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில், சேவூர் ஸ்ரீ வாலீஸ்வர சுவாமி கோவில் மற்றும் திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில் ஆகிய கோவில்களிலும், ஆருத்ரா தரிசன விழா நடந்தது. ஸ்ரீநடராஜமூர்த்தியும், சிவகாமியம்மனும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். அதிகாலை, 4:00 மணி முதலே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.