பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் மார்கழி உற்ஸவத்தில் 27ம் நாளான நேற்று ஆண்டாள் - பெருமாளுடன் மாலை மாற்றும் கூடார வல்லி விழா நடந்தது. மார்கழி மகா உற்ஸவத்தையொட்டி பரமக்குடியில் உள்ள பெருமாள்,சிவன் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் திருப்பாவை, திருவெம்பாவைபாடப்பட்டு வருகிறது. தொடர்ந்து அனுமன் ஜெயந்தி, சிவபெருமாள் படியருளியலீலை, வைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம் என கொண்டாடப்பட்டன.மார்கழி 27 ம் நாளான நேற்று பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில்,ஆண்டாள் நாச்சியார் - பெருமாளுடன் சேர்க்கையான கூடாரவல்லி நாள் விழாகோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதன் படி ஆண்டாள் - சுந்தரராஜப் பெருமாளிடம் 108 அண்டாவில் சர்க்கரை பொங்கல் (அக்காரவடிசில்), 108 அண்டாவில் வெண்ணெய் படைப்பதாக வேண்டியிருந்தார்.இதன் பொருட்டு பின்னாளில் ராமனுஜர் இதனை நிறைவேற்றியதாக கூறப்படுகிறது. இதனை நினைவு கூறும் வகையில் பெருமாள் கோயிலில் 216 வட்டிலில் சர்க்கரை பொங்கல் மற்றும் வெண்ணெய் வைத்து பூஜை செய்யப்பட்டது. அதிகாலை 5:00 மணிக்கு ராமானுஜர் கோயில் ஆடி வீதியில் உலா வந்தார் . பின்னர் திருப்பாவை பாடல்கள் பாடப்பட்டு, பெருமாள்-ஆண்டாள் மாலை மாற்றல் நிகழ்ச்சி நடந்தது. பின், சிறப்பு பூஜைகள் நிறைவடைந்து தீபாராதனைக்குப் பின்பிரசாதம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.