பதிவு செய்த நாள்
16
ஜன
2020
03:01
திருப்பூர்: திருப்பூரில் மும்மதத்தினர் இணைந்து கொண்டாடிய மத நல்லிணக்க பொங்கல் விழா பலரது பாராட்டை பெற்றது.திருப்பூர், அவிநாசி ரோடு, குமார் நகர் - சாமுண்டிபுரத்தில், ம.தி.மு.க., சார்பில் பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
விழாவில், மும்மதத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. அவ்வகையில், மொத்தம், 550 பெண்கள் பங்கேற்றனர். அனைவரும் தங்கள் வீட்டு முன், பொங்கல் வைத்தனர்.ஒரு கி.மீ., நீளத்துக்கு பெண்கள் வரிசையாக பொங்கல் வைத்ததை கண்டு பலரும் மகிழ்ச்சி அடைந்தனர். பொங்கல் விழாவில், பங்கேற்றவர்கள் பெயர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு, முதல் மூன்று பரிசுகளாக பிரிட்ஜ், வாஷிங் மெஷின், பீரோ மற்றும் ஆறுதல் பரிசு, 20 பேருக்கு வழங்கப்பட்டது.பொங்கல் விழா குறித்து, அதன் அமைப்பாளர் நாகராஜன் கூறுகையில், தொடர்ந்து, 23 வது ஆண்டாக மத நல்லிணக்க பொங்கல் விழா நடத்தப்படுகிறது. மக்களிடையே மதமாச்சர்யங்களை களைந்து, சமூக ஒற்றுமை ஓங்கும் வகையில், அனைவரும் பங்கேற்றது மகிழ்ச்சியாக இருக்கிறது, என்றார்.