வெள்ளகோவில்: வெள்ளகோவில் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் 9ம் ஆண்டு விழா மற்றும் 30ம் ஆண்டு கொலு வழிபாட்டு விழா நேற்று நடந்தது.
நேற்றுமுன்தினம், காலை, யாகபூஜை சிறப்பு அபிஷேக ஆராதனையுடன் துவங்கப்பட்டு சவுடேஸ்வரி அம்மனுக்கு காவிரி தீர்த்தம் கொண்டு வரப்பட்டு, தீர்த்த அபிஷேகம் நடந்தது. வீரக்குமாரசாமி கோவில் வளாகத்தில் இருந்து சக்தி அழைப்பு நடந்தது.இளைஞர்கள் கத்தி போட்டு அம்மனை வரவேற்றனர். நேற்று காலை 6:00 மணிக்கு வீரக்குமார் சுவாமி கோவிலில் இருந்து கன்னி தீர்த்தம் கொண்டு வந்து பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து அன்னதானம் நடந்தது. மாலை 4:00 மணி அளவில் எல்.கே.சி., நகர் புற்றுக்கண் ஆனந்த விநாயகர் கோவிலில் இருந்து ராகதீபம் கொண்டுவரப்பட்டது.மாலை 6:00 மணியளவில் பெண்கள் மாவிளக்கு எடுத்து சிறப்பு பூஜை நடந்தது. இன்று அதிகாலை 4:00 மணிக்கு சவுடேஸ்வரி அம்மனுக்கு மறுஅபிஷேகம் செய்து அம்மனை அனுப்பிவைக்கும் நிகழ்வுடன் விழா நிறைவடைந்தது. ஏற்பாடுகளை தேவாங்கர் சமூகத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.