பதிவு செய்த நாள்
28
ஏப்
2012
10:04
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நடைபெற்று வரும் சித்திரை திருவிழாவின் ஆறாம்நாளான இன்று சுவாமியும், அம்மனும் ரிஷப வாகனத்தில் பவனி வருகின்றனர். சிவபெருமானுக்குரிய வாகனங்களில் சிறப்பானது ரிஷபவாகனம். தர்மதேவதையே ரிஷப வாகனமாக வந்து இறைவனை தாங்கி நிற்பதாக ஐதீகம். நாயன்மார்கள் அறுபத்து மூவரில் திருஞானசம்பந்தர் குறிப்பிடத்தக்கவர். மூன்றுவயது பாலகனாக இருந்தபோது, அவரது தந்தை சிவபாத இருதயர் அவரை அழைத்துக் கொண்டு சீர்காழி தோணியப்பர் கோயிலுக்குச் சென்றார். குழந்தையை கோயிலில் உள்ள குளக்கரையில் அமர்த்தி விட்டு நீராடக் கிளம்பினார். நேரமானதால் பசியால் வாடிய சம்பந்தர் "அம்மா என்று அழத் தொடங்கினார். இறைவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தான் மட்டும் வராமல், அம்மா என்று அழைத்ததால் உலகன்னை பார்வதியையும் அழைத்து வந்தார். அம்பிகை சம்பந்தரைக் கையில் வாரி எடுத்து, பொற்கிண்ணத்தில் ஞானப்பால் கொடுத்து மறைந்தாள். கரையேறிய சிவபாத இருதயர், பால் சிந்திய வாயோடு நின்றிருந்த சம்பந்தரிடம் கோபம் கொண்டார். குச்சியொன்றைக் கையில் எடுத்து மிரட்டி, "உனக்கு பாலூட்டியது யார் ? என்று கேட்க, குழந்தை ஞானத்தமிழால் பாடத் துவங்கியது. "தோடுடைய செவியன்... என்ற முதல் தேவாரப்பாடல் அக்குளக்கரையிலேயே அரங்கேறியது. அப்போது அம்மையும், அப்பனும் ரிஷபவாகனத்தில் காட்சி அளித்தனர். சம்பந்தர் பெற்ற ஞானக்காட்சியை நாமும் பெறவேண்டும் என்பதற்காக சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் ரிஷபவாகனத்தில் பவனி வருகின்றனர். மற்ற வாகனங்களில் சுவாமி தரிசனம் செய்வதை விட, ரிஷப வாகன தரிசனமே புண்ணியம் தரும் அனுகிரகக் கோலமாகும். இதனைத் தரிசித்தவர்கள் நீண்ட ஆயுள், உடல்நலம், மனோபலம், செல்வவளம் பெறுவர். இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் பவனியைத் தரிசிக்கத் தவறாதீர்கள். இதை விட புண்ணிய தரிசனம் வேறில்லை!