பதிவு செய்த நாள்
28
ஏப்
2012
10:04
மார்த்தாண்டம்: முன்சிறை திருமலை மகாதேவர் கோயிலில் நடந்த தேவபிரசனத்தில் கோயில்களில் ஆகம விதிகளை மீறக்கூடாது என வலியுறுத்தப்பட்டது. குமரி மாவட்டத்தில் பன்னிரு சிவாலயங்களில் முதல் கோயிலான முன்சிறை திருமலை மகாதேவர் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்தவும், திருப்பணிகள் மேற்கொள்ளவும் முன்னோடியாக தேவபிரசனம் நடந்தது. புளியங்குடி அர்ஜூனன் ஆசான் தேவபிரசனம் ஆருடம் செய்தார். தந்திரி வாசுதேவன் நம்பூதிரி, மாதவன் நம்பூதிரி, ஓமனகுட்டன் முன்னிலை வகித்தனர். கோயில் அபிஷேகத்திற்கு உரிய தண்ணீர் சுத்தப்படுத்த வேண்டும். தினசரி பூஜை பொருட்கள், நிவேத்தியம் போதுமான அளவில் இல்லை. சுற்றுப்புறங்களில் தூய்மை தேவை. மாதந்தோறும் பரிகார ஹோமங்கள் நடத்த வேண்டும் என ஆருடத்தில் வலியுறுத்தப்பட்டது. இதுவரை கடைபிடித்து வந்த பூஜை முறைகளில் மாற்றம் தேவை இல்லை. கோயில்களில் முன்னோர்கள் வகுத்த ஆகம விதிகளை மீறக்கூடாது. முகமண்டபம் தற்போதைய நிலையிலேயே இருக்க வேண்டும் எனவும் ஆருடத்தில் கூறப்பட்டது. சமர்ப்பண உணர்வுடன் பக்தர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கோயில் தந்திரி மற்றும் நிர்வாகம் அனுமதியுடன் தச்சுசாஸ்திர விதிப்படி கட்டுமான பணிகள் துவங்கலாம் என அறிவுறுத்தப்பட்டது. கோயில் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் பக்தர்கள் அனைவரும் பரிகார பூஜைகளில் பங்கு கொள்வது அவசியம். குறிப்பிட்ட சில நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பரிகார பூஜைகளில் கலந்து கொள்வது நலம் தரும் எனவும் ஆருடத்தில் கூறப்பட்டது. முன்சிறை பஞ்., தலைவர் சந்திரசேகர், புதுக்கடை பஞ்., தலைவர் மோகனகுமார், பக்தர் சங்க செயலாளர் மணிகண்டன், பொருளாளர் சோமசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் சங்கம் இணைந்து செய்திருந்தது.