பதிவு செய்த நாள்
25
ஜன
2020
12:01
திண்டுக்கல்: முன்னொரு காலத்தில் இரவு நேரம் பத்தினிப்பெண் ஒருவர் கணவருடன், விருதுநகர் மாவட்டம் கமுதி அருகே நரிக்குடி அன்னசத்திரத்தில் தங்கினார். அழகான அப்பெண்ணை அபகரிக்க கருதிய சிலர், கணவரை ஏமாற்றி வேட்டைக்கு அழைத்துச் சென்று கொன்று விடுகின்றனர். அப்பகுதியை ஆண்ட மருதுபாண்டியர் ராஜாவிடம் அப்பெண் முறையிட்டார்.
அவர்களை தண்டிப்பதாகவும், மகள்போல கவனித்துக் கொள்வதாகவும் மன்னர் கூறினார். அதனை ஏற்க மறுத்த அப்பெண், தான் பத்தினி என்பதை நிரூபிக்க சந்தன கட்டையில் இறக்க விரும்பி, அதன்படியே தீயில் விழுந்து இறந்தார். அவர் அணிந்திருந்த சேலை, அணிந்திருந்த கருகமணி அப்படியே இருந்தது. அன்று முதல் ஒரே கல்லில் இருஉருவமாக வடிவமைத்து எல்லைக்கோயிலாக தீப்பாச்சியம்மனை முக்கிய நகரங்களில் வைத்து மக்கள் வழிபடுகின்றனர். அதில் ஒன்றாக திண்டுக்கல்லிலும் இக்கோயில் உள்ளது. இக்கோயில் தலைவர் பி.ஜெயச்சந்திரன் கூறியதாவது: திண்டுக்கல்லில் அபிராமியம்மன், கோட்டைமாரியம்மன் கோயில்களைப் போல பழமை வாய்ந்தது. திப்புசுல்தான், கோபால் நாயக்கர் காலத்தில் திண்டுக்கல் நகரின் எல்லை காவல் தெய்வமாக தீப்பாச்சியம்மன் கோயில் அமைந்தது.
தைப்பொங்கல் நாளில் மஞ்சள் காப்பு செய்து, மூன்றாம் நாள் கரைத்து மஞ்சள் பிரசாதம் வழங்குகிறோம். ஆடிமாதம் திருவிழா வளர்பிறையில் முளைப்பாரி ஊர்வலம் என 3 நாட்கள் நடைபெறும். 1997 ம்ஆண்டு கும்பாபிேஷகம் பாதிரியார், முஸ்லிம் ஹஜ்ரத் முன்னிலையில் நடந்தது. ரூ.1.40 லட்சம் செலவில் 64 கோடி தேவதைகள், சிவன் அடங்கிய ’மகாமேரு’ இங்கு உள்ளது. இதனை பவுர்ணமியில் விளக்கேற்றி வழிபட்டால் நினைத்த காரியம் நடக்கும் என்பது ஐதீகம். குலதெய்வம் தெரியாதவர்கள் இந்த அம்மனை வழிபட்டால் போதும், என்றார்.
தொடர்புக்கு: 87543 30121ல் பேசலாம்.