சிவன்மலை கோயில் பேழையில் மஞ்சள் துண்டுடன் தாலிக்கயிறு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜன 2020 10:01
திருப்பூர் :சிவன்மலை கோயிலில் கண்ணாடிப்பேழையில் மஞ்சள் துண்டு கோர்த்த தாலிக்கயிறு வைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அடுத்த சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோயில் அருணகிரிநாதரால் பாடப் பெற்ற திருத்தலம். இங்குள்ள கண்ணாடிப் பேழை ஆண்டவர் உத்தரவுப் பெட்டி என அழைக்கப்படுகிறது. சிவன்மலை ஆண்டவர் யாராவது ஒரு பக்தரின் கனவில் தோன்றி குறிப்பால் உணர்த்தும் ஒரு பொருள் இதில் வைத்து பூஜிக்கப்படும். இதில் இடம் பெறும் பொருள் சமுதாயத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கம் ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.
கடந்த ஆக. மாதம் ஐம்பொன் மகாலட்சுமி சிலை வைத்து பூஜிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கோவை பெரியநாயக்கன்பாளையம் காமராஜ் நகரைச் சேர்ந்த காமராஜ் 45 என்பவர் கனவில் தோன்றிய உத்தரவுப்படி ஐந்து எண்ணிக்கையிலான மஞ்சள் துண்டு கோர்த்த மஞ்சள் தாலிக்கயிறு நேற்று உத்தரவுப் பெட்டியில் வைக்கப்பட்டது.
கோயில் சிவாச்சாரியார்கள் கூறுகையில் மஞ்சள் தாலிக் கயிறு வைக்கப்பட்டுள்ளதால் திருமணத் தடைகள் நீங்கி, அதிகளவிலான திருமணங்கள் நடக்கலாம். கடந்த சில ஆண்டாக மஞ்சளுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் சிரமப்பட்டு வந்தனர். கிருமி நாசினியாகவும், மங்களமான பொருளாகவும் கருதப்படும் மஞ்சளுக்கு விலை உயர்வு, அதிக விளைச்சல் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. தற்போது கிருமிகள் தாக்கம் மற்றும் நோய் தொற்று அதிகம் உள்ளது. அவ்வகையில் மஞ்சளின் பயன்பாடு அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது என்றனர்.