பதிவு செய்த நாள்
30
ஜன
2020
11:01
கோபி: மூன்றாவது கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, 14 ஆண்டு கழித்து, பச்சமலை முருகன் கோவிலில் உள்ள, 40 அடி உயரமுள்ள செந்தில் ஆண்டவர் சிலை, பெயின்ட் அடித்து புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.
ஈரோடு மாவட்டம், கோபி, பச்சமலையில், பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இங்கு, கடந்த, 1981, 2006ல் கும்பாபிஷேகம் நடந்தது. மூன்றாவது கும்பாபிஷேகம் நடத்த, இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்தது. இதையடுத்து, உபயதாரர்கள் நிதி உதவியுடன், கோவிலில் பல்வேறு திருப்பணிகள் நடக்கின்றன.
தனி சன்னதி...: சிவன் சன்னதி மண்டபத்தில், 16 லட்சம் ரூபாயில் அழகுபடுத்தும் பணி நடக்கிறது. அர்த்த மண்டப வளாகத்தில், தேக்கு மர கனக சபையில் அருள்பாலிக்கும் நடராஜர், சிவகாமி அம்பாளுக்கு, 32 லட்சம் ரூபாய் செலவில், தனி சன்னதி கட்டும் பணி, கடந்த ஏப்.,22 முதல், நடந்து வருகிறது. இந்நிலையில், வரும் ஜூலை, 2ல், காலை, 9:30 முதல், 10:30 மணிக்குள், கும்பாபிஷேகம் நடத்த, அறநிலையத்துறையினர் முடிவு செய்துள்ளனர். பச்சமலை முருகன் கோவிலை, அடையாளம் காட்டும், 40 அடி உயர, செந்தில் ஆண்டவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த, 2002 மார்ச் 6ல், திறப்பு விழா கண்ட சிலையில், ஐந்து அடி உயரத்தில் மயிலும், தண்டம் மற்றும் வேலாயுதத்தை கையில் ஏந்தியபடி உள்ளது. கடந்த, 2006ல், இரண்டாவது கும்பாபிஷேகம் நடந்த சமயத்தில், செந்தில் ஆண்டவர் சிலை, பெயின்ட் அடித்து புதுப்பிக்கப்பட்டது. அதன்பின், கடந்த, 14 ஆண்டுகளாக, இந்த சிலையை முறையாக, கோவில் நிர்வாகம் பராமரிக்கவில்லை. மூன்றாவது கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, செந்தில் ஆண்டவர் சிலை, புதுப்பித்து பெயின்ட் அடிக்கும் பணி நடக்கிறது.