புகழ்பெற்ற குருவாயூர் கோயிலில் சித்திரை விஷு நாள் புனிதமானதாகக் கருதப்படுகிறது. அந்நாளில் நவக்கிரகங்களில் முதல்வனான சூரியன் உச்சபலத்தைப் பெறும் மேஷ ராசிக்கு இடம் பெயர்கிறார். இந்நாளில் மலைநாடான கேரளாவில் மக்கள் வருஷப்பிறப்பை வெகு விமரிசையாகக் கொண்டாடுகின்றனர். அந் நாளில் கோயிலின் குறுகிய வாசற்படிகளின் வழியாக சூரியக்கதிர்கள் குருவாயூரப்பன் மீது படிவது சிறப்பான நிகழ்வாகும். இதேபோல பாண்டிநாட்டு திருப்பதியான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரானைச் சூரியன் தான் உச்சம் பெறும் சித்திரையிலும், நீச்சம் பெறும் ஐப்பசியிலுமாக ஆண்டுக்கு இருமுறை தரிசிக்கிறார். சித்திரை, ஐப்பசி 6ம்தேதியில் இந்த சூரியபூஜை நிகழ்கிறது.