திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜன 2026 03:01
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று தைக் கார்த்திகை, தெப்பம் முட்டுத் தள்ளும் நிகழ்ச்சி, தேரோட்டம் நடந்தது. நாளை (ஜன. 28) தெப்பத் திருவிழா நடக்கிறது.
முகூர்த்த கால்: சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை சர்வ அலங்காரத்தில் ஜி.எஸ்.டி. ரோடு அருகேயுள்ள தெப்பக்குளம் கரையில் எழுந்தருளினர். கோயில் சிவாச்சார்யார்கள் யாகம் வளர்த்து சுத்தியல், அரிவாள், உளி, முகூர்த்தகாலுக்கு பூஜை செய்து, தீபாராதனை முடிந்து தெப்பக்குளம் தண்ணீரில் அமைக்கப்பட்டிருந்த மிதவை தெப்பத்தில் முகூர்த்தகால் கட்டப்பட்டது. மூங்கிலால் சுவாமி தெப்பத்தை முட்டுத் தள்ளும் நிகழ்ச்சி நடந்தது.
தேரோட்டம்: 16கால் மண்டபம் முன்பு அலங்கரிக்கப்பட்டிருந்த சிறிய வைரத் தேரில் இன்று சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளினர். பூஜை முடிந்து தேர் சக்கரங்களில் பூசனிக்காய்கள் வைத்து தேங்காய் உடைக்கப்பட்டது. பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க ரத வீதிகளில் தேரோட்டம் நடந்தது. கோயில் அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா, அறங்காவலர் சண்முகசுந்தரம், கண்காணிப்பாளர்கள் ரஞ்சனி, சத்தியசீலன், தி.மு.க., வடக்கு மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினர் பாலாஜி கலந்து கொண்டனர். நாளை காலை 9:40 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை மிதவை தெப்பத்தில் எழுந்தருளி தெப்பத் திருவிழா நடக்கிறது.