பதிவு செய்த நாள்
04
பிப்
2020
10:02
திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில் நேற்று நடந்த தைக்கிருத்திகை விழாவில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்ததால், மூலவரை தரிசிக்க, பொது வழியில், 5 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.
சிறப்பு அபிஷேகம் திருத்தணி முருகன் மலைக்கோவிலில், நேற்று, தை மாத கிருத்திகையையொட்டி, அதிகாலை, 4:45 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, தங்கவேல், தங்ககீரிடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து மூலவருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை, 10:00 மணிக்கு, காவடி மண்டபத்தில், உற்சவர் முருகப் பெருமானுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.மாலை, 5:00 மணிக்கு, மூலவருக்கு சாய்ரட்சை பூஜையும், இரவு, 7:00 மணிக்கு, உற்சவர் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் மாட வீதியில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஒரு லட்சம் பக்தர்கள் நேற்று நடந்த கிருத்திகை விழாவில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர். சில பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற மொட்டை அடித்து, காவடிகள் எடுத்து வந்தும் வழிபட்டனர்.பொதுவழியில் மூலவரை தரிசிக்க, பக்தர்கள், 5 மணி நேரமும், சிறப்பு தரிசன டிக்கெட்டுகள், 100 மற்றும் 150 ரூபாய் டிக்கெட்டில், இரண்டரை மணி நேரமும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, மூலவர் முருகப் பெருமானை தரிசித்தனர்.
அலகு, காவடிகள் எடுத்து பக்தர்கள் பிரார்த்தனை திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் கிருத்திகை விழா நேற்று நடந்தது. ஏராளமான பக்தர்கள் மெய்சிலிர்க்கும் விதத்தில் அலகு குத்தி காவடிகளுடன் தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றினர்.அதிகாலை, 3:00 மணி முதல் பக்தர்கள் மொட்டையடித்து, சரவணப்பொய்கையில் நீராடினர். பின், நீண்ட வரிசையில் நின்று, கந்தனுக்கு அர்ச்சனை செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடு களுக்கு, போலீசார் ஆங்காங்கே நியமிக்கப்பட்டிருந்தனர்.விழா ஏற்பாடுகளை, செயல் அலுவலர் சக்திவேல் தலைமையில், பணியாளர்கள் செய்திருந்தனர்.