பதிவு செய்த நாள்
05
பிப்
2020
05:02
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள உமைய பார்வதி அம்மாள், ஸ்ரீமூலநாதர் சாமிகளுக்கு மகாகும்பாபிஷேகம் நடந்தது. திரளாக பக்தர்கள் பங்கேற்று கும்பாபிஷேகத்தை பக்தி பரவசத்துடன் கண்டு களித்து தரிசனம் செய்தனர்.
உலக புகழ்பெற்ற நடராஜர் கோயிலில், உள் பிரகாரத்தில் உமையபார்வதி ஸமேத மூலநாதர் சாமிகளுக்கு தனி சன்னதி உள்ளது. இன்று (பிப்.,5ல்) இவர்களுக்கு கும்பாபிஷேகம் விழா நடந்தது. விழாவையொட்டி கடந்த 30 ம் தேதி வினாயகர் சன்னதியில் மகா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து 1 ம் தேதி முதல் யாகசாலை பூஜை துவங்கியது. 2ம் தேதி இரண்டாம் கால யாகசாலையும், மாலை மூன்றாம் கால யாகசாலை பூஜையும் நடந்தது. தொடர்ந்து கன்யா பூஜை, மகா தீரபாரனை நடந்தது. தொடர்ந்து 8 கால யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டது. மூலநாதருக்கு சாத்த 2 ஆயிரம் ருத்ராட்சம் கொண்ட மண்டபம் அமைத்து பூஜைகள் செய்யப்பட்டது. யாகசாலை பூஜையின் போது கொரோனோ வைரஸ் தாக்குதலில் இருந்து உலகை காக்க சங்கல்பம் செய்யப்பட்டது.
முக்கிய நிகழ்வான கும்பாபிஷேக நாளான இன்று(பிப்.,5) காலை கோ பூஜை, அஸ்வ பூஜை, கஜபூஜை, கட யாத்ரா தானம், ஆகியன நடந்தது. பின்னர் கடம் புறப்பாடாகி மேலே உள்ள கோபுரத்திற்கு கலசம் கொண்டு செல்லப்பட்டது. சரியாக காலை 9.35 மணிக்கு மூலநாதருக்கும், 9.40 மணிக்கு உமையபார்வதிக்கும் கலசத்தின் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மாலை ஸ்நபன,ஹவன ஸஹித மகாபிஷேகம் மற்றும் பஞ்சமூர்த்தி வீதி உலா நடந்தது. கும்பாபிஷேக விழாவையொட்டி சிதம்பரம் டி.எஸ்.பி., கார்த்திகேயன் தலைமையில் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் மற்றும் போலீசார் 100 க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.