பதிவு செய்த நாள்
06
பிப்
2020
10:02
பரமக்குடி:பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் ஜீவா நகர் பாலசுப்ரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
விழாவையொட்டி பிப்.3 காலை 7:15 மணி முதல் அணுக்ஞை, கணபதி ஹோமம், நவக்கிரக, மகாலஷ்மி, பிரசன்ன ஹோமங்கள் நடந்தன. பின்னர் வைகை ஆற்றில் இருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. மாலை 5:00 மணி துவங்கி வாஸ்து சாந்தி, ரக் ஷாபந்தனம், கலா கர்ஷணம் நிறைவடைந்தது.அன்று முதல் கால யாக பூஜைகள் நிறைவு பெற்று, புதிய சுவாமி விக்ரகங்கள் நகர் வலம் வந்தன. பிப்.4ல் காலை 2 மற்றும் 3 ம் கால யாக பூஜைகள் நிறைவடைந்தன.
நேற்று காலை 6:00 மணிக்கு 4ம் கால யாக பூஜைகள் துவங்கி, மஹாலக்ஷ்மி, பாலசுப்பிரமணியர் ஹோமம் உள்ளிட்டவை நிறைவடைந்து, மகா பூர்ணாகுதி நடந்தது.பின்னர் யாக சாலையில் இருந்து புனித தீர்த்த குடங்கள் புறப்பாடாகி, கோயிலை வலம் வந்தது. காலை 9:05 மணி முதல், 9:50 மணிக்கு மூலஸ்தான விமான கலசங்கள் மற்றும் அனைத்து பரிவார தெய்வங்களின் விமான கலசங்களுக்கும், சுவாமிகளுக்கும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.மாலை 5:00 மணி முதல் பாலசுப்பிரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனைகள் நடந்து பிரசாதம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக யாக சாலை பூஜைகளை பரமக்குடி ஈஸ்வரன் கோயில் கட்டியப்பா குருக்கள் தலைமையில், எமனேஸ்வரம் சங்கர் பட்டர் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் நடத்தினர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.