பதிவு செய்த நாள்
06
பிப்
2020
11:02
தலைவாசல்: கரிவரதராஜ பெருமாள் கோவிலில், ஏழு நூற்றாண்டுக்கு பின் கும்பாபிஷேகம் நடந்தது.
சேலம் மாவட்டம், தலைவாசல், ஆறகளூரில், பழமையான, கரிவரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இது, 13ம் நூற்றாண்டில் கட்டப்பட்டு, திருப்பணி செய்ததாக, கோவிலில் உள்ள கல்வெட்டு மூலம் தெரியவருகிறது. இந்நிலையில், தமிழக அறநிலையத்துறை, தசாவதார அமைப்பு குழு, திருவோண பூஜை வழிபாட்டு குழு, தனுர்மாத கட்டளைதாரர்கள் இணைந்து, கோவில் சீரமைப்பு பணியை மேற்கொண்டனர். மூன்று நிலை ராஜகோபுரம், மூலவர், கமலமங்கை நாச்சியார் சன்னதி, வரசித்தி ஆஞ்சநேயர் ஆகியவை சீரமைக்கப்பட்டு, புது கோபுரம் கட்டப்பட்டது. நேற்று காலை, 9:00 மணிக்கு, கோபுர கலசத்துக்கு புனித நீரூற்றி, வேத மந்திரம் முழங்க கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, கூடியிருந்த திரளான பக்தர்கள் மீது, புனிதநீர் தெளிக்கப்பட்டது. மூலவர் வரதராஜர், ஸ்ரீதேவி, பூதேவியுடன், சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த பக்தர்கள் தரிசனம் செய்தனர். கோவில் கட்டப்பட்ட பின், இதுவரை கும்பாபிஷேகம் நடந்ததாக, கல்வெட்டு உள்ளிட்டவற்றில், எந்த தகவலும் இல்லை. இதனால், 13ம் நூற்றாண்டுக்கு பின், தற்போது, ஏழு நூற்றாண்டு கழித்து, கும்பாபிஷேகம் நடந்தது.