பதிவு செய்த நாள்
06
பிப்
2020
11:02
பனமரத்துப்பட்டி: பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.
பனமரத்துப்பட்டி, காளியாகோவில் புதூரில், பத்ரகாளியம்மன், விநாயகர், கருப்பணார் சிலைகள் அமைத்து, கோபுரம், மூலஸ்தானம், அர்த்த மண்டபம் உருவாக்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம், கணபதி, நவக்கிரக, மகாலட்சுமி யாகம், காவேரி தீர்த்தம், முளைப்பாரி எடுத்து வருதல், கோபுர கலசம் வைத்தல், மருந்து சாத்துதல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடந்தன. நேற்று காலை, மூலஸ்தான கோபுரம், பத்ரகாளியம்மனுக்கு புனித நீரூற்றி, அர்ச்சகர்கள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து, கோ பூஜை, அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்து, தீபாராதனை காட்டினர். இதில், ஏராளமான பக்தர்கள், பத்ரகாளியம்மனை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை, பத்ரகாளியம்மன் அறக்கட்டளை, ஊர்மக்கள் செய்திருந்தனர்.
தீர்த்தக்குட ஊர்வலம்: சேலம், அம்மாபேட்டை, நாமமலை, சோமநாதேஸ்வரர் கோவிலில், கவுரி அம்மன், காலபைரவர் சிலைகளை பிரதிஷ்டை செய்து, கும்பாபிஷேக விழா, கடந்த ஜன., 15ல் முகூர்த்த கம்பம் நடுதலுடன் தொடங்கியது. நேற்று காலை, 9:00 மணிக்கு, நாமமலை அடிவாரத்திலுள்ள கோவிந்தராஜ பெருமாள் கோவிலிலிருந்து, புனிதநீர் நிரப்பிய தீர்த்தக்குடங்கள், முளைப்பாரி, பாலிகை தட்டுகளை எடுத்துக்கொண்டு, திரளான பக்தர்கள், மேள, தாளம் முழங்க, ஊர்வலமாக மலை ஏறி, கோவிலுக்கு சென்றனர். இன்று காலை, கவுரி அம்மன், காலபைரவர், பரிவார தெய்வங்கள், மூலவர் சோமநாதேஸ்வரர் கோபுர கலசங்களுக்கு, பக்தர்கள் தங்கள் கைகளால் அபிஷேகம் செய்ய அனுமதிக்கப்படுவர். பின், கோபுர கலசங்கள், புதிய சிலைகளை பிரதிஷ்டை செய்து, இரவில் அஷ்டபந்தன மருந்து சாத்தப்படும். நாளை காலை, 9:00 முதல், 9:45 மணிக்குள், கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனித நீரூற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைப்பர். தொடர்ந்து, மூலவர் விக்கிரகங்களுக்கு புனிதநீரால் அபிஷேகம் செய்யப்படும். மாலை, கவுரி அம்மன், சோம நாதருக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கவுள்ளது.