பதிவு செய்த நாள்
30
ஏப்
2012
10:04
உடுமலை : உடுமலை அருகே திருமூர்த்தி மலையில் நேற்று, சூறாவளி காற்றுடன் தொடர் மழை பெய்ததால், சுற்றுலாப்பயணிகளும், பக்தர்களும் பஞ்சலிங்க அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கோவில் நடை சாத்தப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. உடுமலை அருகே, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில், திருமூர்த்தி மலை உள்ளது. மலை அடிவாரத்தில் மும்மூர்த்திகள் குடி கொண்டுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலும், பஞ்சலிங்க அருவியும் அமைந்துள்ளன. படகுத்துறை, வண்ணமீன் காட்சியகம் உள்ளிட்ட பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்துள்ளதால், அதிக அளவு சுற்றுலாப்பயணிகள் இப்பகுதிக்கு வந்து செல்கின்றனர். தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், சுற்றுலாப்பயணிகள் மற்றும் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. கடந்த சில வாரங்களாக மழையில்லாததால், பஞ்சலிங்க அருவி வறண்டு பாறையாக காணப்பட்டது. நேற்று மதியம், 1 மணிக்கு சூறாவளி காற்றுடன், கன மழை பெய்யத் துவங்கியது. தொடர்ந்து இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக தொடர்ந்து பெய்த மழையால்; மலைப்பகுதியில், சுற்றுலாப்பயணிகள், பக்தர்கள் பஞ்சலிங்க அருவிக்கும் செல்ல தடை விதிக்கப்பட்டது. போலீசாரும், கோவில் பணியாளர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். கோவில் நிர்வாகத்தினர் கூறியதாவது: தொடர் மழையால், வெண்டையாறு, வண்டியாறு, கொட்டையாறு, பாறைப்பட்டியாறு, குருமலையாறு, உளுவியாறு, கிழவிப்பட்டி வழியாக பஞ்சலிங்க அருவிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று பலத்த மழை காரணமாக, அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்க, அருவிக்கு செல்ல பக்தர்களுக்கும், சுற்றுலாப்பயணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டது. கோவில் செயல் அலுவலர் அழகேசன் அறிவுரைப்படி, கோவில் நடை சாத்தப்பட்டது; உண்டியலுக்குள் மழை நீர் புகாமல் தடுக்க பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் வரிசையில் நின்று இறைவனை தரிசிக்க அமைக்கப்பட்ட வரிசை கம்பிகளும், தற்காலிகமாக அகற்றப்பட்டுள்ளன. கண்காணிப்புப் பணியில் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.