பதிவு செய்த நாள்
30
ஏப்
2012
10:04
திருவாரூர் : தியாக பிரும்மம் தியாகராஜர் ஜெயந்தியை முன்னிட்டு தமிழகத்தின் முன்னணி இசை வித்வான்களின் பஞ்ச ரத்ன கீர்த்தனை இசை வேள்வி ஆராதனை நிகழ்ச்சி திருவாரூரில் நடந்தது. கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளான தியாகபிரும்மம் தியாகராஜர், முத்துஸ்சுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் அவதரித்த ஸ்தலமான திருவாரூரில் மும்மூர்த்திகள் ஜெயந்தி விழாவையொட்டி நேற்று காலை தியாகராஜர் கோவிலில் பஞ்சரத்ன கீர்த்தனை வேள்வி இசைவிழா நடந்தது. காஞ்சி காமகோடி பீட கர்நாடக சங்கீத சேவா அறக்கட்டளை சார்பில் மும்மூர்த்திகள் விழா தியாகராஜர் சுவாமி கோவில் கமலாம்பாள் சன்னதியில் ஸ்ரீ சியாமா சாஸ்திரிகள் ஜெயந்தியான 23ம் தேதி துவங்கி 7 நாட்கள் நடந்தது. இதில் தமிழகம் முழுவதும் உள்ள முன்ணணி நாதஸ்வர, தவில் வித்வான்கள் கலந்து கொண்டு கச்சேரி செய்தனர். நிறைவு நாளான நேற்று தியாகப்பிரம்மம் தியாகராஜர் ஜெயந்தி விழா நடந்தது. இதனையொட்டி தியாகராஜர் அவதரித்த வீட்டில் அலங்கரிக்கப்பட்ட திருவுருவச் சிலைக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடந்தது. அவரது வீட்டில் 24 மணி நேர அகண்ட கானம் கச்சேரி நிகழ்ச்சி நடந்தது. பின்னர் கமலாம்பாள் சன்னதி மேடையில் விழா குழு தலைவர் மடிப்பாக்கம் சாமிநாதன் தலைமையில் தமிழகத்தில் உள்ள முன்னணி கர்நாடக இசை மேதைகளான வயலின் கிருஷ்ணன், கன்னியாகுமரி, மிருதங்கம் பக்தவச்சலம், சிதம்பரம் பாலசங்கர், சவுமியா, சங்கரி கிருஷ்ணன், மகாராஜபுரம் ராமச்சந்திரன், பம்பாய் சகோதரிகள், முரளி, டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம், சம்பா கல்கூரா, சிக்கல் குருசரண் பாட்டு, வீணை கண்ணன், சாக்சபோன் கத்தரி கோபால்நாத் மாம்பலம் சகோதரிகள், களக்காடு டாக்டர் சீதாலட்சுமி, நிர்மலா வைத்தியநாதன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் பங்குகொண்டு தியாகராஜரின் பஞ்சரத்ன கீர்த்தனை இசை வேள்வியை நடத்தினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை தியாகராஜர் ஜெயந்தி விழாவில் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.