பதிவு செய்த நாள்
30
ஏப்
2012
11:04
வேதாரண்யம்: வேதாரணீயஸ்வரர் கோவிலில் சிவன், பார்வதி திருமணக்கோலத்தில் காட்சியளிக்கும் ஐதீக பெருவிழா வெகு விமர்சையாக நடந்தது. வேதாரண்யம் வேதாரணீஸ்வரர் கோவில் 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் ஆகும். இது ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்கள் முழங்கிய ஸ்தலமாகும். திருக்கயிலாயத்தில் சிவன், பார்வதி திருமணம் நடந்தபோது வடதிசை தாழ்ந்து, தென்திசை உயர்ந்தது. இதனால், உலகினை சமப்படுத்தி மக்களை காத்தருள, அகஸ்தியரை சிவபெருமான் பணித்தார். இதற்கு அம்மை, அப்பன் திருமணத்தை காணும் பாக்கியத்தை தானும் காண அருள்பாலிக்க வேண்டும் என்றார் அகஸ்தியர். இதைத்தொடர்ந்து அகஸ்திய முனிவரும் காணும் வகையில், எங்கிருந்து உலகை சமன் செய்கிறாயோ, அவ்விடத்தில் திருமணக்கோல காட்சியளிப்பதாக கூறி சிவபெருமான் அருளினார். இதன்படி வேதாரண்யத்தில் அகஸ்தியர் இருந்தபோது சிவபெருமான் தம்பதி சமேதரராக திருமண கோலத்தில் காட்சியளித்தார். இவ்விழா ஆண்டுதோறும் சித்திரை மாத சப்தமி திதியில் நடந்து வருகிறது. வேதாரணீஸ்வரர் கோவிலில் சிவபெருமாள், பார்வதி திருமண கோலக்காட்சி அகஸ்தியருக்கு அருளும் ஐதீக திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி திருமண கோலத்திலுள்ள வேதாரணீயஸ்வரருக்கு சப்தமி திதியில் அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டது. இதில், ஸ்வாமியின் திருமேனிக்கு சந்தனம் அரைத்து பூசப்பட்டது. இந்த அலங்காரம், அடுத்தாண்டு திருமணக்கோல காட்சி நடக்கும் நாள் வரையிலும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. வேதாரணீஸ்வரர் திருக்கல்யாண காட்சியில் ஸ்வாமி சன்னிதி முன்பு, சிவபெருமான், பார்வதி, பெருமாள், பூமாதேவி அலங்கரிக்கப்பட்டு இருந்தனர். மேற்கண்ட திருமண கோலக்காட்சியை காண, அகஸ்தியர் ஸ்வாமி சன்னிதி முன்பு, எழுந்தருளினார். பின்னர் அகஸ்தியருக்கு, கோவில் அர்ச்சகர் பரிவட்டம் கட்டி, தீபாராதனை நடத்தினார். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட பக்தர்கள் கலந்துகொண்டனர். திருமண காட்சியை காண வந்த பெண்களுக்கு வெற்றிலைத்தாம்பூலம், தாலிக்கயிறு, குங்குமம் போன்ற பிரசாதம் வழங்கப்பட்டது.