பதிவு செய்த நாள்
02
மே
2012
10:05
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், நேற்று கோலாகலமாக நடந்தது. இதற்காக காலை 6 மணிக்கு திருப்பரங்குன்றம் முருகன், தெய்வானை மற்றும் பவளக்கனிவாய் பெருமாள் கோயிலுக்கு வந்தனர். காலை 7 மணிக்கு சித்திரை வீதிகளில் மாப்பிள்ளை ஊர்வலம் நடந்தது. பின் சுவாமி சன்னதி முதல் பிரகாரத்தில் உற்சவர் சன்னதியில் சுவாமியும், அம்மனும் அலங்காரமாகி பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினர். காலை 8.40 மணிக்கு மேற்காடி வீதி வழியாக, பூக்களால் அலங்கரிக்கப்பட்ட மண மேடையில் இருவரும் எழுந்தருளினர். மோகன் பட்டர் தலைமையில், யாகசாலை பூஜை துவங்கியது. சுவாமி வெண் பட்டும், அம்மன் செந்நிற பட்டும் அணிந்திருந்தனர். அம்மனுக்கு தங்க கவசம் சாத்தப்பட்டிருந்தது. திருக்கல்யாணத்தின்போது மட்டுமே தங்கக்கவசம் அணிந்த அம்மனை தரிசிக்க முடியும் என்பது சிறப்பு. செந்தில் பட்டர் சுவாமியாகவும், ரமேஷ் பட்டர் அம்மனாகவும் வேடமிட்டு திருக்கல்யாண நிகழ்ச்சியை நடத்தினர். காலை 9.40 மணிக்கு தாரை வார்த்து கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. திருமணம் முடியும் வரை மணமக்கள் மேடையை விட்டு வெளியே வரக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு காப்பு கட்டப்பட்டது. சுவாமிக்கு தேவஸ்தானம் மற்றும் மன்னர் திருமலை நாயக்கர் சார்பில் பரிவட்டமும், அம்மனுக்கு பட்டு வஸ்திரமும் சாத்தப்பட்டது. காலை 9.42 மணிக்கு கெட்டி மேளம் ஒலிக்க, வேத மந்திரங்கள் முழங்க, அம்மனுக்கு சுவாமி வைரத்தாலி அணிவிக்க, கோலாகலமாக திருமணம் நடந்தது. பன்னீர் தெளிக்கப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. பின் 3 கிலோ எடையுள்ள தங்கத்திலான அம்மியில், "அருந்ததி பார்க்கும் நிகழ்ச்சி நடந்தது. மணமக்களுக்கு பாலும், பழமும் கொடுக்கப்பட்டது. திருமணத்தை தொடர்ந்து, பழைய திருக்கல்யாண மண்டபத்தில் உள்ள குண்டோதரன் பூத சிலைக்கு விருந்து படைக்கப்பட்டது. மாலை 4 மணி வரை பழைய திருக்கல்யாண மண்டபத்தில் மணக்கோலத்தில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளினர். அபிஷேகத்திற்கு பின், இரவு 8 மணிக்கு சுவாமி யானை வாகனத்திலும், அம்மன் புஷ்ப பல்லக்கிலும் மாசி வீதிகளில் உலா வந்தனர். இன்று(மே 3) தேரோட்டம் நடக்கிறது. அதிகாலை 5.24 க்குள் தேர் புறப்படுகிறது. ஒருமணிநேரத்திற்கு ஒருமுறை வெடிகுண்டு சோதனை : அம்மன், சுவாமி வேடமிட்டு, திருக்கல்யாணத்தை நடத்திய பட்டர்கள், சித்திரை வீதிகளில் யானைகள் மீது ஊர்வலமாக அவரவர் வீடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
* திருக்கல்யாணம் முடிந்து வெளியேறிய பக்தர்களாலும், இலவச உணவுகள் வாங்கியவர்களாலும் சித்திரை வீதிகளில் ஆங்காங்கே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
* மாப்பிள்ளை அழைப்பை காண பக்தர்களை, சித்திரை வீதிகளில் அனுமதிக்க போலீசார் கெடுபிடி காட்டினர்.
*சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் திருவருள் முருகசபை சார்பில் திருமண விருந்து நடந்தது.
* மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரி சார்பில், சித்திரை வீதிகளில் இலவச முதலுதவி மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன.
*பக்தர்களுக்கு இலவசமாக பல்வேறு தரப்பினர் தாலி, குங்குமம் மற்றும் குளிர்பானங்கள், உணவுகளை வழங்கினர்.
* திருக்கல்யாணத்தை காண வந்த 60 வயது பெண் ஒருவரின், 4 பவுன் நகை திருடப்பட்டது.
* நேற்று முன் தினம் மதுரை அண்ணாநகரில் "டைம்பாம் வெடித்ததை தொடர்ந்து, நேற்று திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உட்பட 6 வெளிமாவட்ட வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் உடனடியாக வரவழைக்கப்பட்டு, ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை கோயிலில் சோதனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.