பதிவு செய்த நாள்
19
பிப்
2020
10:02
மாமல்லபுரம் : இலங்கை நாட்டின், கதிர் வேலாயுத சுவாமி கோவிலின் பிரமாண்ட உலோக வேல் உள்ளிட்ட தெய்வ படைப்புகளை, மாமல்லபுரம் கலைஞர்கள் வடித்தனர்.
இலங்கை நாட்டில், நுவரேலியா மாவட்டம், ராகலை பகுதியில், தமிழர்கள் அதிகம் வசிக்கின்றனர். இவர்கள் வழிபாட்டிற்காக கட்டப்பட்ட, கதிர் வேலாயுத சுவாமி கோவிலில், 7ம் தேதி, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.இக்கோவிலை, மாமல்லபுரத்தைச் சேர்ந்த சிற்பக் கலைஞர்களே வடிவமைத்துள்ளனர்.மாமல்லபுரத்தைச் சேர்ந்த அசோக்குமார், ரமேஷ் ஆகிய சகோதரர்கள், 60 அடி உயர முருகர், சுதை சிலை செய்துள்ளார்; செந்தில் என்பவர், மூன்றரை அடி உயர வள்ளி, தெய்வானையுடன், முருகர், மூலவர் சிலை அமைத்துள்ளார்.
வடகடம்பாடி, தண்டபாணி என்பவரின் கைவண்ணத்தில், 40 அடி உயரம், 86 கிலோ எடையில், பித்தளையில் தங்க முலாம் பூச்சுடன் தயாரான வேல் மற்றும் கலசங்கள், கோவிலில் நிறுவப்பட்டு உள்ளன. உலக அளவில், முருகர் கோவில்களின் வேல், சுதை சிற்பமாகவே அமைந்துள்ளன. இங்கு மட்டுமே, 6 அடி உயர வேல், 34 அடி தண்டு என, முற்றிலும் பித்தளையில், முதல்முறையாக அமைத்துள்ளதாக கலைஞர்கள் தெரிவித்தனர்.இவர்கள், மாமல்லபுரம், அரசு சிற்பக் கல்லுாரி, முன்னாள் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.