புதுச்சேரி அன்னையின் 142வது பிறந்த நாளையொட்டி ஆரோவில் மற்றும் அரவிந்தர் ஆசிரமங்களில் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் கூட்டு தியானத்தில் ஈடுபட்டனர்.புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தை நிறுவிய பக்தர்களால் அன்னை என அழைக்கப்படும் மீரா அல்பாசா பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் 1878 பிப். 21ல் பிறந்தார்.அரவிந்தரின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு 1914ல் புதுச்சேரிக்கு வந்த அன்னை மனித குல ஒருமைப்பாட்டுக்கு உதாரணமாக ஆரோவில்லில் சர்வதேச நகரை நிறுவினார். பல்வேறு ஆன்மிக சேவைகள் புரிந்து 1973 நவ. 17ல் மறைந்தார். அன்னையின் 142வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது.இதையொட்டி புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் அரவிந்தர் அன்னை மீரா தங்கியிருந்த அறைகள் பக்தர்களின் சிறப்பு தரிசனத்துக்கு திறந்து வைக்கப்பட்டன.இதேபோல் அவர்கள் பயன்படுத்திய பொருட்களும் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. அவர்களது சமாதிகள் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தன. இவற்றை பக்தர்கள் தரிசித்து கூட்டு தியானம் செய்தனர்.ஆரோவில் சர்வதேச நகர் ஆம்பி தியேட்டரில் நேற்று போன் பயர் நடந்தது. அதிகாலை 5:00 மணிக்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கூடி தியானம் செய்தனர்.இக்கூட்டு தியானத்தின்போது அன்னையின் குரலில் ஆரோவில் சாசனம் ஒலிபரப்பப்பட்டது. போன் பயரின் தீப்பிழம்பில் ஆரோவில் மாத்ரி மந்திர் தங்க நிறத்தில் ஜொலித்தது அனைவரையும் பரவசப்படுத்தியது.