பதிவு செய்த நாள்
23
பிப்
2020
07:02
அயோத்தியா : உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில், ராமர் கோவில் கட்டுமானப் பணி முடிவடையும் வரை, அங்குள்ள ராமர் சிலை தற்காலிகமாக வேறு இடத்தில் வைத்து வழிபாடு நடத்தப்படும் என, ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை அறிவித்துள்ளது.
கட்டுமான பணி: உ.பி., அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அறக்கட்டளை நிர்வாகிகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டனர். 3.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில், கோவில் கட்டும் பணி, விரைவில் துவங்க உள்ளது. இதையடுத்து, கோவில் கட்டப்படவுள்ள இடத்தை, அறக்கட்டளை நிர்வாகிகள் நேற்று (பிப்., 22) பார்வையிட்டனர். அப்போது, ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளையின் பொதுச் செயலர் சம்பத் ராய், செய்தியாளர்களிடம் கூறியதாவது:ராமர் கோவில் கட்டுவதற்காக திரட்டப்படும் நிதியை முதலீடு செய்ய, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில், தனி வங்கி கணக்கு துவக்கப் பட்டுள்ளது.
வழிபாடு: மொத்தமுள்ள 3.5 ஏக்கர் நிலத்தில், 1 ஏக்கரில் கோவிலும், மீதமுள்ள, 2.5 ஏக்கரில் சுற்றுவட்டாரப் பகுதிகளும், கோவிலுக்கு வருவதற்கான பாதைகளும் அமைக்கப்பட உள்ளன.ராமர் கோவில் கட்டுமானப் பணி முடிவடையும் வரை, இங்கு உள்ள ராமர் சிலையை, தற்காலிகமாக வேறு இடத்தில் வைத்து வழிபாடு நடத்தப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.