பதிவு செய்த நாள்
20
ஜூலை
2020
10:07
அயோத்தி: உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, ஆகஸ்ட், 5ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் பங்கேற்க, அறக்கட்டளை விடுத்த அழைப்பை, பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுள்ளார்.
உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அயோத்தியில், ராமர் கோவில் கட்ட, உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பரில் அனுமதி வழங்கியது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, ராமர் கோவில் கட்டுவதற்கு, அயோத்தி ராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா என்ற பெயரில், அறக்கட்டளையை, மத்திய அரசு, கடந்த பிப்ரவரியில் அமைத்தது. அயோத்தியில், கோவில் கட்டுவதற்கான முதல் கட்ட பணிகள், கடந்த மார்ச் மாதம் நடந்தன. சர்ச்சை ஏற்படுத்தப்பட்ட பகுதியில் இருந்த தற்காலிக ராமர் கோவில், வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, கட்டுமான பணிகளை துவங்குவதற்கான அடிக்கல் நாட்டு விழாவை நடத்தவும், அறக்கட்டளை முடிவு செய்தது. இது தொடர்பாக, அயோத்தி ராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் ஆலோசனை கூட்டம், நேற்று முன்தினம், அயோத்தியில் நடந்தது.
சம்மதம்: இதில், அடிக்கல் நாட்டு விழாவுக்கு, பிரதமர் மோடியை அழைக்கவும், பிரதமர் பங்கேற்பதை பொறுத்து, அடிக்கல் நாட்டு விழாவை ஆகஸ்ட், 3 அல்லது 5ம் தேதியில் நடத்தவும் திட்டமிடப்பட்டது. இதன் அடிப்படையில், ஆகஸ்ட் 5ல் பூமி பூஜை நடத்தவும், அடிக்கட்டு நாட்டும் விழாவில் பங்கேற்கவும் பிரதமர் மோடி சம்மதம் தெரிவித்துள்ளார்.
இது பற்றி, அறக்கட்டளை உறுப்பினர் கோவிந்த கிரி மஹராஜ் கூறியதாவது: அயோத்தியில், ஆக, 5ம் தேதி, அடிக்கல் நாட்டு விழாவை நடத்தினால், அதில் பங்கேற்பதாக, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதன்படி, ஆக., 5ம் தேதி, அடிக்கல் நாட்டு விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அயோத்தியில், ஆக., 5ம் தேதி, காலை, 11:௦௦ மணி முதல் மதியம், 1:10 மணி வரை, மோடி நேரம் ஒதுக்கி இருப்பதாக, பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அதனால், அடிக்கல் நாட்டு விழாவுக்கு முன் நடத்தப்பட வேண்டிய பூஜைகள், 5ம் தேதி காலை, 8:00 மணிக்கு துவங்கும். பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியான வாரணாசியிலிருந்து, வேத விற்பன்னர்கள் வரவழைக்கப்பட்டு, அடிக்கல் நாட்டு விழாவுக்கான பூஜைகள் நடத்தப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
வடிவமைப்பில் மாற்றம்: இந்நிலையில், ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி, அயோத்தியில் கட்டப்பட உள்ள ராமர் கோவிலின் வடிவமைப்பாளர், சந்திரகாந்த் சோம்பூரா கூறியதாவது: அயோத்தியில் கட்டப்பட உள்ள ராமர் கோவிலின் உயரம், 128 அடியாக இருக்கும் என, முதலில் முடிவு செய்யப்பட்டது. ஆனால், அறக்கட்டளை உறுப்பினர்கள் மற்றும் துறவியரின் விருப்பங்களை ஏற்று, வடிவமைப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, கோவிலின் உயரம், முன்பு திட்டமிட்டதை விட, அதிகரிக்கப்படும். 161 அடி உயரம் கொண்டதாக கோவில் இருக்கும். மேலும், கோவிலில், மூன்று நிலைகள் கொண்ட கோபுரம் கட்ட முடிவு செய்யப்பட்டிருந்தது. இப்போது, இது ஐந்து நிலையாக அதிகாரிக்கப்பட்டுள்ளது. முதலில், 67 ஏக்கர் நிலத்தில், கோவில் கட்ட முடிவு செய்யப்பட்டது. இப்போது, கோவிலின் வடிவம் விரிவுப்படுத்தப்பட்டுள்ளதால், கோவில், 100 - 120 ஏக்கர் நிலத்தில் கட்டப்படும்.
கொரோனா பரவல் குறைந்த பின், கோவில் கட்டுமானத்துக்கான அனைத்து வரைபடங்களும் தயாரிக்கப்பட்டு, இறுதி செய்யப்படும். முதலில், கோவில் கட்டுவதற்கு, 100 கோடி ரூபாய் செலவாகும் என, மதிப்பிடப்பட்டது. இப்போது, வடிவம் மாற்றப்படுவதால் செலவு அதிகரிக்கும். கோவில் வடிவம் மாற்றப்பட்டாலும், கருவறையில் எந்த மாற்றமும் செய்யப்படாது.
கோவிலில் உயரம் அதிகரிக்கப்பட்டாலும், அது, இந்தியாவின் உயரமான கோவிலாக இருக்காது. கோவிலின் உயரத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ளதால், கட்டுமானம் முடிவதற்கான காலமும் அதிகரிக்கும். மூன்று முதல் மூன்றரை ஆண்டுக்குள் கோவிலை கட்டி முடிக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
மக்களிடம் நன்கொடை: அறக்கட்டளையின் பொதுச் செயலர், சம்பத் ராய் கூறியதாவது:அயோத்தியில், கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில், ஆன்லைன் அல்லது வீடியோ கான்பரன்ஸ் வழியாக, பிரதமர் பங்கேற்பதை நாங்கள் விரும்பவில்லை. நேரிடையாக பங்கேற்க வேண்டும் என்ற எங்கள் அழைப்பை, பிரதமர் ஏற்றுக் கொண்டுள்ளார். விழாவில் பங்கேற்க, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் உட்பட பலருக்கு அழைப்பு விடுக்க உள்ளோம். விழாவில், சமூக இடைவெளியை கடைப்பிடித்து, அனைவரும் பங்கேற்பர்.
மேலும், 60 மீட்டர் ஆழத்துக்கு கீழே உள்ள மண்ணின் வலிமையின் அடிப்படையில், கோவிலுக்கு அஸ்திவாரம் போடப்படும். வரைபடத்தின் அடிப்படையில், அஸ்திவார பணிகள் துவக்கப்படும். கோவில் கட்டுவதற்காக, மத்திய, மாநில அரசுகளிடம் எந்த நிதியும் பெறமாட்டோம். நான்கு லட்சம் குடியிருப்புகளில், 10 கோடி குடும்பங்களை தொடர்பு கொண்டு, நன்கொடை பெறப்படும். இவ்வாறு அவர் கூறினார்.