பதிவு செய்த நாள்
03
மே
2012
11:05
ராமநாதபுரம்: சித்திரை திருவிழாவை முன்னிட்டு, ராமநாதபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது. இக்கோயிலில் ஏப். 23ம் தேதி சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு, அபிஷேக ஆராதனை நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை 10.30க்கு மாப்பிள்ளை அழைப்பு, மாலை மாற்றுதல் வைபவத்திற்கு பின், காலை 10.55 மணிக்கு, மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
* பரமக்குடி ஈஸ்வரன் கோயில் சித்திரைத் திருவிழா ஏப்., 24ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தினமும் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்தனர். முக்கிய நிகழ்வான நேற்று, விசாலாட்சி அம்மனுக்கும், சந்திரசேகர சுவாமிக்கும் திருக்கல்யாணம் நடந்தது. நேற்று காலையில் சுவாமி வீதியுலாவுடன் மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம் வந்து, சந்திரசேகர சுவாமியை, பெருமாள் கோயிலுக்கு அழைத்துச் செல்லும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர். இன்று காலை, தேரோட்டம் நடக்கிறது நாளை கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை சுந்தரராஜப் பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்து வருகின்றனர்.
* இதே போல் பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நேற்று முன்தினம் மாலையில் திருக்கல்யாண மண்டபத்தில் சீர்வரிசை நிகழ்ச்சி நடந்தது. நேற்று மாலையில் திருக்கல்யாணம் நடந்தது. இரவில் சுவாமி, யானை வாகனத்திலும், அம்பாள் புஷ்பப்பல்லக்கிலும் வீதிஉலா வந்தனர்.