ராஜபாளையம்: ராஜபாளையம் கல்யாணசுந்தரனார் ரோட்டில் உள்ள கோயில் பகுதியில் குப்பை தொட்டி இல்லாததால், மெயின்ரோட்டில் குப்பை கொட்டப்படுகின்றன. கோயில் செல்லும் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். ஆவரம்பட்டி காளியம்மன்கோயில் எதிரே கல்யாணசுந்தரனார் ரோடு உள்ளது. இதன் அருகே திறந்தவெளி கழிவறையாக உள்ளது. நகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். பல தெருக்கள் இணையும் இந்த ரோட்டில், குப்பை தொட்டியும் இல்லை. அப்பகுதியினர் மெயின்ரோட்டிலே குப்பைகளை கொட்டுகின்றனர். இந்த ரோட்டில் விநாயகர், பெருமாள் கோயில்களும் உள்ளன. கோயில்களுக்கு செல்ல, குப்பைமேடை, திறந்தவெளி கழிவறையை தாண்டி செல்ல வேண்டி உள்ளது. அப்பகுதியினர் கூறுகையில், "அதிகாரிகளிடம் கூறியும் பலனில்லை. குப்பை தொட்டி வைத்தால், ரோடு சுத்தமாகும். பன்றி, நாய் குப்பைகளை கிளறி விடுகின்றன. காற்று அடிக்கும்போது வீட்டு வாசலுக்கு குப்பைகள் வருகின்றன. தினமும் நான்குமுறை வாசலை சுத்தம் செய்யவேண்டி உள்ளது, என்றனர்.