மதுரை :மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ரூ.ஒரு கோடியில் பொற்றாமரைக்குளம், அம்மன் சன்னதியை அழகுபடுத்தும் பணி துவங்கியுள்ளது.பழமையான பொற்றாமரைக்குளம் முன்பு வறண்டு இருந்தது.
குளத்தில் நிரந்தரமாக தண்ணீர் தேக்க தக்கார் கருமுத்து கண்ணன் முயற்சி எடுத்தார்.சென்னை ஐ.ஐ.டி., நீர் மேலாண்மை வல்லுனர் குழு ஆய்வு செய்தது. குளத்தில் இருந்த சிமென்ட் தளம் பெயர்க்கப்பட்டுஐந்தடி ஆழத்துக்குகண்மாய் வண்டல் கொட்டப்பட்டது. நிலத்தடி நீர் பூமிக்குள் செல்ல உதவியது. இதன் மூலம் நிலத்தடி நீர் தேங்கியிருப்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டது. கோயில் கீழ் நீரோட்டம் இருப்பது கோயில் உறுதித்தன்மையை வலுப்படுத்தும். தற்போது பொற்றாமரைக்குளம் தண்ணீருடன் காட்சியளிக்கிறது.ரூ.ஒரு கோடி ஒதுக்கீடுஇணை கமிஷனர் நடராஜன் கூறியதாவது: பொற்றாமரைக்குளம் அருகே பழமையான கல் மேற்கூரை மண்டபம் அகற்றப்பட்டு பழமை மாறாமல் புனரமைக்கப் படுகிறது.ரூ.63 லட்சத்தில் அழகுபடுத்த பொற்றாமரை குளத்தை சுற்றி பழைய இரும்பு தடுப்பு வேலிகள் அகற்றப்பட்டு கலைநயத்துடன் பித்தளை தடுப்பு வேலிகள், பழமையான துாண்களுடன் அமைக்கப்படும்.இப்பணியை கும்பகோணம் பித்தளை பொருள் தயாரிக்கும் கைவினை கலைஞர்கள் மேற்கொள்வர். ரூ.40 லட்சத்தில் அம்மன் சன்னதி முன் இருக்கும் பழைய பித்தளை தடுப்புகள் அகற்றப்பட்டு புதிதாக அமைக்கப்படும். புனரமைப்பு பணிகள் பழமை, கலாசாரம், பாரம்பரியம் மாறாமல் நடக்கிறது. மூன்று மாதங்களில் முடியும், என்றார்.