குமாரபாளையம்: குமாரபாளையம், காளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, தேர்த் திருவிழா நடந்தது. குமாரபாளையம், காளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, நேற்று காலை, 8:00 மணிக்கு அம்மன் திருக்கல்யாண வைபோகம் நடந்தது. இதையடுத்து சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு தேர்த்திருவிழா நடைபெற்றது. பக்தர்கள் ஏராளமானோர் வடம் பிடித்து தேரை இழுத்தனர். ராஜவீதி, சேலம் சாலை, தம்மண்ணன் சாலை வழியாக சென்று, புத்தர் தெருவில் நேற்று நிலை நிறுத்தி வைக்கப்பட்டது. இங்கிருந்து, நாளை காலை மீண்டும் தேரோட்டம் நடைபெற்று கோவில் வளாகத்தில் தேர் நிலையடையும். வழி நெடுக பக்தர்கள் பெருமளவில் திரண்டு நின்று அம்மனுக்கு பூஜை பொருட்கள் கொடுத்து வணங்கினர். பல பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் விதமாக பழங்கள், காசு ஆகியவற்றை தேர் மீது வீசினர். நேற்று இரவு நடந்த வண்டிவேடிக்கை நிகழ்ச்சியில் கடவுளர் வேடமிட்டு குழந்தைகள் வந்தது அனைவரையும் ரசிக்க வைத்தது.