பதிவு செய்த நாள்
07
மார்
2020
02:03
திருப்புத்துார்: சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருப்புத்துார் அரசியல் வரலாற்றில் பல நுாற்றாண்டுகளுக்கு முன்பிருந்து இன்று வரை தனிச்சிறப்பு பெற்றது. கடந்த காலத்தில் நடந்த அரசியல் நிகழ்வுகளை நமக்கு இன்றளவும் படம் பிடித்து காட்டுவது கல்வெட்டுக்களே. இப்படி சிறப்பு மிக்க நுாற்றுக்கும் மேற்பட்ட கல்வெட்டுக்களின் புதையலாக திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயில் உள்ளது. முற்காலப் பாண்டியர், பிற்காலப்பாண்டியர், சோழர், விஜயநகரர் மன்னர்களின் கி.பி. 8 ம் நுாற்றாண்டு முதல் 16ம் நுாற்றாண்டு வரையிலான கல்வெட்டுக்கள் இக்கோயிலில் பரவி உள்ளன. தமிழ், கிரந்தம், வட்டெழுத்து ஆகிய எழுத்துக்களால் செதுக்கப்பட்டுள்ள இக்கல்வெட்டுக்களின் மூலம் கோயில் எப்படி படிப்படியாக நிர்மாணிக்கப்பட்டது என்பது மட்டுமின்றி கோயிலுக்கு பழங்காலத்தில் வழங்கப்பட்ட கொடை, நீதி, நிலவிய சமுதாயம், பண்பாடு, அரசியல், சமயம் குறித்தும் தெரிய வந்துள்ளன.
இக்கோயிலில் பிரிட்டிஷ் ஆட்சியில் தொல்லியல்துறையினரால் 1908 முதல் படி எடுக்கப்பட்டு அண்மைக்காலம் வரை 100க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் படிக்கப்பட்டுள்ளன. கோயில் மூலவர் கருவறை, அதிட்டான சுவர் பகுதி, முதல் மற்றும் இரண்டாம் பிரகார சுவர்கள், பைரவர் சன்னதி மண்டபம் பகுதியிலும் கல்வெட்டுக்கள் அதிகமாக உள்ளன. மிகவும் பழமையான கல்வெட்டு மூலவர் கருவறையில் வடக்கில் உள்ளது. காலத்தால் முற்பட்ட வட்டெழுத்துக் கல்வெட்டு மூலவர் சன்னதி பின்புறம் கொன்றை மரத்தடியில் நிறுவப்பட்டுள்ளது. இப்படி ஆன்மிகச் சிறப்பு மட்டுமின்றி வரலாறு சிறப்புமிக்க இக்கோயிலில் வழிபட மட்டுமின்றி பழமையை கற்கவும் வரலாறு துறை மாணவர்கள் செல்கின்றனர். பல நுாற்றாண்டுகள் அழியாமல் காலத்தை வென்று நிற்கும் கல்வெட்டுக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்புஅனைவருக்கும் உண்டு.