பதிவு செய்த நாள்
11
மார்
2020
10:03
சென்னை, வடபழநி முருகன் கோவில் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் மேற்கொள்ளும் வகையில், பாலாலாயம் துவங்கியது.
சென்னைக்கு மேற்கே, வடபழநியில் அமைந்துள்ளது முருகன் கோவில். 1890ம் ஆண்டு, எளிய ஓலைக்கூரைக் கொட்டகையுடன், இக்கோவில் நிர்மாணிக்கப்பட்டது. இங்கு வைகாசி விசாகத் திருவிழா, 11 நாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆனி மற்றும் ஆடிக் கிருத்திகையில் சிறப்பு பூஜை மேற்கொள்ளப்படுகிறது.ஐப்பசி மாதத்தில், 11 நாட்கள் கந்தசஷ்டி விழா, சூரசம்ஹாரம், லட்சார்ச்சனையுடன் நடக்கிறது. மார்கழி மாதத்தில், ஆருத்ரா தரிசனமும், மாணிக்கவாசகருக்கு ஒன்பது நாட்கள் உற்சவமும் நடைபெறுகிறது. இவ்வளவு பிரசித்தி பெற்ற இக்கோவிலில் திருப்பணிகள் நடக்க உள்ளன. இதற்கான பாலஸ்தாபன விழா, இன்று(மார்.,11ல்) துவங்கியது.
நாளை 12ம் தேதி பாலாலயப் பிரதிஷ்டை நடக்கிறது. இதை முன்னிட்டு, நாளை அதிகாலை, 5:50 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் துவங்குகின்றன.அதைத் தொடர்ந்து, காலை, 8:00 மஹா பூர்ணா ஹூதியும், காலை, 8:30 மணிக்கு பாலாலய பிரதிஷ்டையும் நடக்கிறது. காலை, 9:15 மணிக்கு திருப்பணிகள் துவங்குகின்றன.பாலாலய பிரதிஷ்டையை பக்தர்கள் பார்வையிடுவதற்காக, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் எல்.ஆதிமூலம், கோவில் துணைக் கமிஷனர் சித்ராதேவி ஆகியோர் செய்துஉள்ளனர்.